“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வி

cmவடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார்.

கேள்வி: கடந்த சில வாரங்கள் சிறிலங்கா முழுவதுமே வடமாகாண சபையின் பக்கம் தனது கவனத்தைக் குவித்திருந்தது. வடமாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து வடமாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. உண்மையில் அங்கு என்ன நடந்தது?

பதில்: எமது மாகாண சபையைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் எமது மாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலருக்கு எதிராக நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதென நாம் தீர்மானித்ததுடன் இதற்காக ஆணைக்குழு ஒன்றையும் நியமித்திருந்தோம். அந்தவகையில் இந்த ஆணைக்குழுவால் எம்மிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் வடமாகாண சபையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தவறிழைத்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த உறுப்பினர் வெளிநாடு சென்றதால் இவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படவில்லை. இந்த விசாரணை அறிக்கை எனது கைகளில் கிடைத்த போது, குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு நான் கேட்டுக்கொண்டேன். மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் விசாரணை செய்யப்படாததால், அவர்களை ஒரு மாதம் விடுமுறையில் நிற்குமாறு கோரினேன்.

கேள்வி: விசாரணைகள் மேற்கொள்ளப்படாத இரண்டு அமைச்சர்கள் விடயத்தில் தாங்கள் அநீதி இழைத்தீர்களா?

பதில்: இவர்களுக்கு எதிராக முறைப்பாடு திரும்பப் பெறப்படவில்லை. ஆகவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. இதுபோன்றே, மக்களிடமிருந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆகவே இந்தப் பிரச்சினையை குறித்த சில நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என நான் கருதினேன். புதிய குற்றச்சாட்டுக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதென நான் தீர்மானித்தேன்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியாகும். இந்நிலையில் அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டமை தொடர்பாக இக்கட்சிகளின் தலைவர்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்?

பதில்: எனது நடவடிக்கை தவறானது என சம்பந்தனும் சேனாதிராஜாவும் தெரிவித்திருந்தனர். இந்த விடயத்தில் நான் தவறிழைக்கவில்லை என நான் அவர்களிடம் கூறியிருந்தேன். விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக்கும் போது சாட்சியம் வழங்குபவர் அவருக்கு எதிராக சாட்சிகளைக் கூறுவதற்கு அச்சமுறுவர் என்பதால் நான் சாட்சிகளின் மீதான நேரடியான அல்லது மறைமுகமான எந்தவொரு அழுத்தங்களையும் குறைக்க வேண்டிய நிலையிலிருந்தேன்.

இந்நிலையில் சாட்சியங்கள் மீது எவ்வித அழுத்தமோ அல்லது அவர்களை அச்சுறுத்துவதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது என்பதை எழுத்துமூலம் தருமாறு நான் கேட்டேன். ஆனால் சம்பந்தன் அதனை செய்யவில்லை. இவ்வாறான எழுத்துமூல உறுதிப்படுத்தலை சம்பந்தன் தந்திருந்தால் அதனை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் அவர்கள் இதில் விருப்பம் காண்பிக்கவில்லை. நான் அவர்களை விசாரணையின் போது அனுமதித்திருந்தால் சாட்சியங்களை வழங்கியவர்கள் அச்சமுற்றிருப்பர்.

கேள்வி: எந்த அடிப்படையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று தங்களால் விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்தது?

பதில்: குற்றச்சாட்டுக்கள் எமது மாகாண சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன. நான் அதனை விசாரணை செய்திருந்தால், என்னால் மாகாண சபையின் வேறு வேலைகளைக் கவனித்திருக்க முடியாது. இதன் காரணமாகவே இரண்டு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற பொதுச் சேவை அதிகாரி ஒருவரையும் நியமித்திருந்தேன்.

கேள்வி: இந்த அறிக்கையானது அமைச்சர்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதா?

பதில்: இதில் சில மாற்றங்கள் உள்ளன. இந்த அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும் விசாரணை அறிக்கையில் அவ்வாறன குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களும் கூட்டங்களை ஒழுங்குபடுத்திய போது அதற்காக மேலதிக நிதியைச் செலவு செய்திருந்தமை  கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் நிதி மோசடியில் ஈடுபடவில்லை.

கேள்வி: ஒரு ஆண்டின் முன்னர் தற்போது ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அவர்களைப் பணியிலிருந்து விலக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது நீங்கள் இந்த விடயத்தில் அமைதி காத்தது ஏன்?

பதில்: ஆம். ஒரு ஆண்டின் முன்னர் இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு அமைச்சர்களுக்கு எதிராகவும் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர். இவர்களுக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் இவர்களுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் காணப்படவில்லை. இந்த நான்கு அமைச்சர்களையும் பதவி விலக்கி விட்டு புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

ஆகவே இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்ட போது, மீண்டும் வடமாகாண சபை உறுப்பினர்களிடம் இது தொடர்பாக வினவினேன். அமைச்சர்களுக்கு  எதிராக கடிதத்தை சமர்ப்பித்த 16 அமைச்சர்களில் 12 பேர் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. ஆனால் நான்கு பேர் இந்த அமைச்சர்கள் பதவி விலக்கப்படத் தேவையில்லை எனக் கூறினர். ஆகவே தொடர்ந்தும் இந்த நான்கு அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

கேள்வி: குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டிருந்த வசதி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருந்தனவா?

பதில்: முதலில், இரண்டு அமைச்சர்களிடமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உடைமைகளைக் கையளிக்குமாறு கோரப்பட்டது. ஆனால் பின்னர், இவ்வாறு இடம்பெறக் கூடாது என நான் தீர்மானித்தேன். குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே இது தொடர்பாக தீர்மானிக்கப்படும். இதன் மூலம் இவர்களுக்கான தண்டனையைக் குறைக்க முடியும் என நான் கருதினேன். மற்றைய இரு அமைச்சர்களிடமும் ஒரு மாதத்திற்கு அதாவது விசாரணை நிறைவுறும் வரை அலுவலகத்திற்குச் செல்வதை நிறுத்துமாறு கோரியிருந்தேன். அவர்களுக்கான அமைச்சுச் சம்பளம் மற்றும் அலுவலக வாகனங்கள் என்பன இன்னமும் மீளப்பெறப்படவில்லை.

கேள்வி: குற்றம் சாட்டப்பட்ட நான்கு அமைச்சர்களின் முதலமைச்சராக தாங்கள் உள்ளீர்கள். தங்களது நிர்வாகத்தின் கீழேயே இவர்கள் தவறிழைத்துள்ளனர். இது தங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகிறதா?

பதில்: எனக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டால் கூட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளேன். ஏனெனில் அவற்றை எதிர்நோக்க நான் தயாராக உள்ளேன். எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் இவை தொடர்பாக சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமே தாங்கள் முதலமைச்சராகினீர்கள். ஆனால் தற்போதைய செயற்பாடுகள் தங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாகக் காண்பிக்கின்றன. இது தொடர்பாக தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அவ்வாறான ஒரு முரண்பாடும் காணப்படவில்லை. ஆனால் தமிழ் மக்கள் பேரவையுடன் நான் தொடர்பைக் கொண்டுள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இவ்வாறான எதுவுமில்லை. எமக்கென தேர்தல் அறிக்கை உள்ளது. ஆனால் அவர்கள் இதற்கெதிராகச் செயற்படுவதை நான் பார்க்கிறேன். இதனை நான் எதிர்க்கிறேன்.

ஆனால் நான் கட்சிக்கு எதிரானவன் இல்லை. நான் கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் இங்கு ஒன்றையும் கொழும்பில் வேறொன்றையும் கூறுகிறார்கள். இதுவே என்னைப் பொறுத்தளவில் பிரச்சினையாக உள்ளது. வேறொன்றுமில்லை.

கேள்வி: தமிழ் மக்கள் பேரவையால் எழுக தமிழ் பேரணிகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு தொடர்பாக கூறமுடியுமா?

பதில்: இது பெரும்பாலான மக்கள் கருதுவது போன்று ஒரு அரசியற் கட்சியல்ல. இது மக்களின் நிறுவனமாகும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தென்னிலங்கை அரசியற் கட்சிகளுடன் இணைந்து புதியதொரு அரசியல் சீர்திருத்தத்தை முன்வைத்துள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் தங்களின் செயற்பாடுகள் தென்னிலங்கையுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு தடையாக அமையுமா?

பதில்: நான் இது தொடர்பாக தங்களுக்கு தெளிவான பதிலை வழங்குகிறேன். வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் தொடர்பாக அவர்கள் பேசுவது அவர்களுக்கென அரசியல் சீர்திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். இவ்வாறானதொரு சூழலில் எமது மக்களின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அவாக்கள் என்ன என்பதையும் அவர்கள் நன்கறிந்திருக்க வேண்டும். கொழும்பில் எமது தலைவர்கள் எமது மக்களின் கருத்துகளுக்கு மாறாக பேச்சுக்களை நடத்தும் போது நாங்கள் அது தொடர்பான எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அரசியல் அவாக்கள் போன்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆகவே அவர்கள் இதற்கு எதிராக நடக்கக்கூடாது. மக்களின் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை கூட்டமைப்பு வெளிப்படுத்தும் போது நான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாட்டில் உள்ளேன். இதனையே நான் செய்கிறேன்.

நான் உங்களுக்கு ஒரு இலகுவான உதாரணத்தைக் கூறமுடியும். இன்று, 13வது திருத்தச் சட்டம் உள்ளது. சிறிலங்கா அரசானது எமக்கு சமஸ்டி நிர்வாக முறைமையை வழங்க மறுத்தால், அது தவறானது. ஏனெனில் நாம் இந்த நிர்வாகத்தையே விரும்புகிறோம். ஆனால் சிறிலங்கா மத்திய அரசாங்கம் எமது எல்லா உரிமைகளையும் எமக்குத் தர மறுக்கிறது. தமக்கு மகிழ்ச்சியைத் தருவதை மட்டுமே அரசாங்கம் எமக்குத் தந்துள்ளது. இவ்விரு நிலைப்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதால் நான் இதனைச் சுட்டிக்காட்டுகிறேன். ஆகவே அவர்களுடன் நான் முரண்படத் தேவையில்லை.

கேள்வி: தேசிய பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவிற்கு வந்துள்ளது. வெறும் வார்த்தைகளில் கூறுவது மட்டும் பயனற்றதல்லவா?

பதில்: தங்களின் கருத்து சரியானது. ஆனால் இந்த மக்களால் நீதிமன்றில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். சமஸ்டி நிர்வாகமும் ஒருமைப்பாடும் தற்போதும் நாட்டைப் பாதுகாக்கவில்லை என்பதை அவர்கள் உணரும் வரை அவர்கள் இந்த உரிமையை எமக்கு வழங்க மாட்டார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சமஸ்டி நிர்வாக ஆட்சி எமக்கு வழங்கப்பட வேண்டும். இதனை நாம் வேறுபட்ட வார்த்தையில் கூறமுடியும். நாம் கருத்தியலானது சமஸ்டியை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும்.

கேள்வி: நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் பலர் தங்களை ஒரு இனவாதி எனவும் தாங்கள் இந்த நாட்டை அழிவிற்குள் இட்டுச்செல்வதாகவும் பேசுகிறார்கள். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: அவர்கள் என் மீது இவ்வாறான முத்திரையைக் குத்தினால் அதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களைத் தான் திருமணம் செய்துள்ளனர். நான் கூட கொழும்பில் பிறந்து வளர்ந்தேன். இதன் பிறகும் நான் எவ்வாறு ஒரு இனவாதியாக மாறமுடியும்? இதிலிருந்து நான் எதனை அடைந்து கொள்ள முடியும்? இது முட்டாள்தனமான பேச்சாகும்.

ஆங்கிலத்தில்  –  Malik Chaminda Dharmawardana
வழிமூலம்        – Daily news
மொழியாக்கம் – நித்தியபாரதி

-puthinappalakai.net

TAGS: