புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017ம் ஆண்டின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் பெறும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனின் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டக் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கடந்த 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் இதுவரையில் 1360 பேருக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வருடம் ஐந்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 60 பயனாளிகள் வீதம் மொத்தமாக 300 பயனாளிகளுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபா நிதியினை வாழ்வாதார முன்னேற்றத்திற்காக வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மூலமாக வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு சரியான திட்டத்தினைத் தெரிவு செய்வது சம்பந்தமாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களினால் தெரிவுசெய்யப்பட திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு நிதி ஆணைக்குழுவின் ஒப்புதலை பெறுவதற்காகத் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பா. டெனீஸ்வரன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளை அறிவுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com