புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அன்று ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளதாத எம்மைக் கொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று வைத்தியர் நா.பன்னீர்செல்வம் எழுதிய விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் மற்றும் தடம் என்ற இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வின்போது விருந்தினர்களாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மனிதாபிமான சேவையாற்றிய வைத்தியர் சத்தியமூர்த்திக்கு மனிதாபிமான பணியாளனுக்கான விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
1987ம் ஆண்டு காலப் பகுதியிலேயே எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம்.
ஏனெனில் அப்போதே 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது, குறித்த முறைமையை அப்போதிருந்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரம் ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கு இணைந்த தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியாவை கொண்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்று கொள்ளலாம் என்பதாகும்.
ஆனால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளோம். இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒற்றை ஆட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அன்று ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளாத எம்மைக் கொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது.
எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல, எமது தலைமைகளே துரோகம் செய்கின்றது.
இவ்வாறு உருவாக்கப்படும் எல்லா அரசியலமைப்புக்களின் கீழ்பகுதியிலும் தமிழ், ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் சிங்கள மொழியில் உள்ளதே ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அவ்வாறு இரு மொழிகளிலும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒற்றை ஆட்சி என்ற பதம் சிங்கள மொழியில் உள்ளமையால் அதுவே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com