சிறுபான்மைக்குக்குள்ளும் சிறுபான்மையாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழுகின்ற மக்கள் காணப்படுகின்றார்கள். யாழ்ப்பாணச் சமூகத்தினரால் அவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் எனத் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வறுமை தொடர்பான SAAPE அறிக்கை மற்றும் VGGT தமிழ் கைநூல் வெளியீடு இன்று திங்கட்கிழமை(10) முற்பகல் யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்றாட உணவுக்கே தடுமாறுகின்ற, வாழ்வை இழந்து தவிர்க்கும் இந்த மக்களுக்கு உதவ வேண்டியது காலத்தின் தேவை.
கடந்த வாரம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்தில் 5000ற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தார்.
உலகில் 80 வீதமான மக்கள் 20 வீதமான வளங்களையே தற்போது பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்கள் அந்தந்தப் பிரதேசங்களை ஆட்சி செய்கின்ற உரிமைக்கு உரித்துடையவர்கள்.
மீனவ வளங்கள், காணி வளங்கள், வனாந்தர வளங்கள் போன்ற வளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், ஆட்சி செய்வது தொடர்பாகவும் அந்தந்தப் பகுதி மக்கள் உரிமை கொண்டிருக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தியே கடந்த-2003ம் ஆண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயப் பிரதிநிதிகளும் மீனவப் பிரதிநிதிகள், தொழிலாளப் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரையும் இணைத்து நிலையான அபிவிருத்திக்கும், சமாதானத்துக்குமான மக்கள் கலந்துரையாடலை ஆரம்பித்திருந்தோம்.
நிலையான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்குமாக நாங்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
-tamilwin.com