ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினால் தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும்.
ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை ஒவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன.
எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காணமுடியாது. அவ்வாறே மதத்தை எடுத்துக் கொண்டால் 22 அரபு நாடுகளும் ஒரு இஸ்லாமிய மதத்தையும், ஒரே அரபு மொழியையும் கொண்டுள்ளன. ஆனால் பிரதேச அடிப்படையில் அவை தனித்தனி அரசுகளாக உள்ளன.
ஒரு தேசிய இனத்திற்கு பொது நிலம், பொது மொழி, பொதுவான கலாச்சாரம், பொதுவான வரலாற்று மனப்பாங்கு, பொதுப் பொருளாதாரம் எனப் பல அம்சங்கள் ஒன்று சேர வேண்டியிருந்தாலும் இவற்றில் தலையாயது பொது நிலப்பரப்பு அல்லது தாயக நிலப்பரப்பு தான்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர் தரப்பில் பெரிதும் விளங்கி கொள்ளப்படாது இருக்கும் பிரதான பகுதி சிங்கள – பௌத்தர்களிடம் காணப்படும் இந்தியா மீதான அச்சமும், ஈழத்தமிழரை இந்தியாவுடன் இணைத்து அடையாளம் கண்டு இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத்தமிழர் மீது அவர்கள் தொடர்ச்சியாக புரிந்து வருகின்றனர் என்பது தான்.
நவீன வரலாற்றில் இலங்கை போன்ற சிறிய நாடுகள் அண்டையில் இருக்கும் பெரிய நாடுகளால் இயல்பாகவே கபளீகரம் செய்யப்பட்டு விடுமென்ற கருத்து 20ம் நூற்றாண்டின் முற்காற் பகுதியில் தோன்றியிருந்தது.
பின்னாளில் இந்தியப் பிரதமராக இருந்த ஜவர்ஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஒஃப் இந்தியா (Discovery of India) என்னும் நூலில் இலங்கை – இந்திய உறவு பொறுத்து இதனையொத்த கருத்து காணப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை பொறுத்து இக்கருத்து ஏனைய சிறிய நாடுகளை விடவும் முக்கியமானது.
இலங்கை உட்பட இந்திய உபகண்டம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரித்தானியர் 500 ற்கும் மேற்பட்ட இராச்சியங்களை ஒன்றாக இணைத்து ஓர் இந்திய அரசை உருவாக்கிய போது இலங்கையை இந்தியாவுடன் இணைக்கவில்லை.
ஏனெனில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விட்டால் தமது நீண்ட எதிர்கால கடல் மற்றும் பிராந்திய ஆதிக்கங்களுக்கு அது இடையூறாக அமைந்து விடும் என்பதாகும்.
இலங்கை இந்தியாவினால் ஒரு காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டு விடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்கள அறிஞர்கள் மத்தியிலும், சிங்கள – பௌத்த மத நிறுவனத்தவர்கள் மத்தியிலும் மிக ஆழமாக உண்டு.
இலங்கை இந்தியாவுடன் ஒரு மாகாணமாக இணைக்க வேண்டும் என்ற கருத்தை 1918ம் ஆண்டு சேர்.பொன் அருணாசலம் முதல்முறையாக வெளியிட்டிருந்தார். அப்போது அதை சிங்களத் தலைவர்கள் வெகுவாகப் புறந்தள்ளினர்.
இராணுவம், வர்த்தகம், இந்தியாவின் பாதுகாப்பு ஆகிய அர்த்தங்களில் இலங்கை இந்தியாவிற்கு உயர்நிலையமான அமைவிடத்தைக் கொண்டுள்ளதால் இந்தியா இலங்கையை தன்னுடன் இணைத்து விடும் என்ற பலமான அச்சம் மேற்படி சிங்கள ஆளும் குழாத்தவரிடமும், பௌத்த மத நிறுவனங்களிடமும் உண்டு.
இந்த நிலையில் இந்தியா இலங்கையை ஒருநாள் தன்வசப்படுத்த முயற்சிக்கும் என்றும் அதில் முற்றிலும் சிங்கள – பௌத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுடன் இணைப்பது மக்களின் எதிர்ப்பின் பேரால் சாத்தியப்படாது போனாலும் ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்குப் பகுதி இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாகக் கூடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் தெளிவாக உண்டு.
இத்தகைய அச்சத்தை டி.எஸ்.சேனாநாயக்க பிரித்தானிய முக்கியஸ்தர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட போது அவர் அளித்த ஆலோசனையின் பேரில் டி.எஸ்.சேனாநாயக்க செயற்பட்டார் என்று ஒரு செவிவழித் தகவல் உண்டு.
அதாவது டி.எஸ்.சேனாநாயக்க இவ்வாறு அச்சம் தெரிவித்த போது அந்த பிரித்தானிய முக்கியஸ்தர் பின்வருமாறு கூறினாராம்.
அதாவது கேக்கை துண்டு துண்டாக வெட்டிச் சாப்பிடுவது போல கேந்திர முக்கியத்துத்திற்குரிய கிழக்கு மாகாணத்தை துண்டு துண்டாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கபளீகரம் செய்து விட்டால் கிழக்கில்லாத வறண்ட வடக்கு இந்தியாவிற்குத் தேவைப்படாது என்பதே அந்த ஆலோசனையாகும்.
மேற்படி ஆலோசனையை உறுதிப்படுத்தத்தக்க ஆவணப்பதிவுகள் எதுவும் இல்லை. டி.எஸ்.சேனாநாயக்க விவசாய அமைச்சராக இருந்த போது அந்த அமைச்சில் டி.எஸ்.சேனாநாயக்கவின் இளநிலைச் செயலாளாராக தமிழரான சிறிகாந்தா பணியாற்றியிருந்தார்.
எனவே டி.எஸ்.சேனாநாயக்கவுடனான அவரது அனுபவங்களை பதிவு செய்து ஒரு நூலாக வெளியிடும் நோக்குடன் 1980ம் ஆண்டு அவரைச் சந்தித்தேன். அவரும் அதனை வரவேற்றார்.
மூன்று தடவைகள் அவரைச் சந்தித்தது உரையாட முடிந்த போதிலும் அவரது முதுமையும், நோயும், மரணமும் அதனைத் தொடர இடமின்றி தடுத்து விட்டன.
ஆனால் நிகழ்ந்த உரையாடலின் போது டி.எஸ்.சேனாநாயக்கவிற்கு மேற்படி ஆலோசனையை வழங்கிய பிரித்தானிய முக்கியஸ்தர் பற்றி வினவிய வேளை அப்படி ஒரு ஆலோசனை வழங்கப்பட்டதான செய்தியை தானும் அறிந்திருப்பதாகவும், ஆனால் அந்த முக்கியஸ்தரைப் பற்றியோ அவரது பெயர் விபரங்களைப் பற்றியோ தான் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.
“வெற்றி கொள்ளப்பட்ட எதிரியின் நிலப்பரப்பில் இராணுவ முகாம்களை அமைப்பதை விடவும் குடியேற்றங்களை அமைப்பது மேலானது.
ஏனெனில் குடியேற்றங்கள் நிரந்திர வெற்றிக்கான அடிப்படைகளாகும்.” மார்க்கியவல்லியின் கூற்றை பின்பற்றி குடியேற்றங்களை நிறுவும் திட்டத்தை டி.எஸ்.சேனாநாயக்க பின்பற்றத் தொடங்கினார்.
அதனடிப்படையில் கிழக்கை சிங்கள குடியேற்றத்தின் மூலம் கபளீகரம் செய்வது என்ற கொள்கையை டி.எஸ்.சேனாநாயக்க வகுத்து அதனை வெற்றிகரமாக செயற்படுத்தினார்.
யாரிடம் புத்தி கேட்க வேண்டும் என்பதும், யாருடைய புத்தியை மதிக்க வேண்டும் என்பதும் சிங்களத் தலைவர்களுக்குத் தெரியும். டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நிர்வாகசபை முறை மூலமாக அமைச்சர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை இருந்தது.
அப்போது 1936ம் ஆண்டு தேர்தலின் பின்பு ஜி.ஜி.பொன்னம்பலத்தை அமைச்சரவையில் சேர்க்காமல் விடுவதற்கு என்ன வழியென பரன் ஜெயதிலக ஒரு பிரபல்யமான தமிழ் மூளையிடம் புத்தி கேட்டார்.
அந்த தமிழ் மூளை பின்வருமாறு ஜெயதிலகவிற்கு புத்தி கூறியதாக சொல்லப்படுகிறது.
அதாவது 50 பேர் கொண்ட அரசாங்க சபையில் 7 பேருக்குக் குறையாத 8 பேருக்கு மேற்படாத அங்கத்தவர்கள் இருக்குமாறு 7 நிர்வாக சபைகள் உருவாக்கப்படும்.
அந்த நிர்வாக சபையின் தலைவரே அமைச்சராவார். இந்த நிலையில் ஜி.ஜி.பொன்னம்பலம் அங்கம் பெறும் அந்த நிர்வாக சபையில் 4 சிங்களவரையும், 3 தமிழரையும் கொண்டதாக அதனை ஆக்கிவிட்டால் பொன்னம்பலம் அதற்குத் தலைவராக ஆக முடியாது என்று அந்த தமிழ் கணித மூளை எண்கணித முறையில் பதிலளித்தது.
இப்போது பரன் ஜெயதிலக ஒரு சபையிலாவது தமிழர் பெரும்பான்மையாக வர முடியாதவாறு 7 சபைகளையும் உருவாக்கினார்.
இதன் மூலம் 1936ம் ஆண்டு தனிச் சிங்கள மந்திரிசபை உருவானது. புத்தி கேட்கவும் ஒரு புத்தி வேண்டும் என்பதற்கு இணங்க சிங்களத் தலைவர்களுக்கு யாரிடம் புத்தி கேட்பது என்பதில் எப்பொழுதும் முன்னறிவு உண்டு.
அப்படியே தமிழ்த் தலைவர்களை எப்படிப் பயன்படுத்தி தமிழினத்தை அழிக்கலாம் என்பதிலும் அவர்களிடம் மதிநுட்பமும், செயல் நுணுக்கமும் உண்டு.
டி.எஸ்.சேனாநாயக்க விவசாயக் குடியேற்றங்கள் என்பதன் பேரில் கிழக்கை வெற்றிகரமாக கபளீகரம் செய்யும் நடைமுறையில் முன்னேறினார். 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்லோயா திட்டமும் இதில் முக்கியமானது.
கிழக்கை சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பும் அதேவேளை வடக்கையும் – கிழக்கையும் நிலத்தொடர்பின்றி பிரிக்கக்கூடிய வகையில் மணலாறு குடியேற்றத்திட்டத்தை சிங்கள ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக வகுத்து நடைமுறைப்படுத்தினர்.
ஒருபுறம் கிழக்கு கபளீகரம் செய்யப்படுவது மட்டுமன்றி மறுபுரம் அது வடக்கில் இருந்து நிலத்தொடர்பின்றி சிங்களக் குடியேற்றத்தால் பிரிக்கப்படுவதும் நடந்தேறத் தொடங்கியது.
தமிழ்த் தலைவர்கள் தங்கள் மூளைகளை சட்டப் புத்தகங்களுக்குள்ளும், தங்கள் கண்களை பணப் பெட்டகங்களுக்குள்ளும் புதைத்துக் கொண்டிருக்கும் பகுதிநேர அரசியல் தலைவர்களாக விளங்கிய நிலையில் சிங்களத் தலைவர்கள் தமிழரின் தாயகத்திற்கான இருதய நிலப்பரப்பை அறுத்துக் கொண்டனர்.
அத்துடன் தமிழ் அதிகாரிகளைப் பயன்படுத்தியே இந்த சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொண்டனர். சிங்களக் குடியேற்றங்களுக்கான காணி ஒதுக்கீடு, நிதி வழங்கல் மற்றும் வள விநியோகங்கள் என்பன பெருமளவு தமிழ் அதிகாரிகளினாலேயே அமுல்படுத்தப்பட்டன.
இத்தகைய தமிழ் அதிகாரிகள் மனதளவில் தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர்களாக இருந்தாலும் செயலளவில் சிங்களக் குடியேற்றத்திற்கு சேவை செய்யும் துர்ப்பாக்கியத்தில் காணப்பட்டனர்.
அவர்களது வாய் தமிழ்த் தேசியத்தை உச்சரித்த போதிலும் அவர்களது கரங்கள் சிங்களக் குடியேற்றத்திற்கு சேவை செய்தன. இது ஒரு இருதலை கொள்ளி அவலமாகும்.
ஒருவர் என்ன நினைக்கிறார் என்ன சொல்கிறார் என்பதல்ல முக்கியம். அவரது செயல் யாருக்கு சேவை செய்கிறது என்பதற்கு இணங்க தமிழ்த் தலைவர்களினதும், தமிழ் அதிகாரிகளினதும் செயல்கள் சிங்கள ஆதிக்கவாதத்திற்கு சேவை செய்பவையாகவே அமைந்தன என்ற வரலாற்றுத் துயரத்தை தமிழ்த் தரப்பினர் கருத்தில் எடுத்துக் கொள்வது அவசியம்.
தமிழ் மக்களின் நிலங்களை விழுங்குவதன் மூலமே தமிழ் மக்களின் தேசியத் தன்மையை அழித்துவிடலாம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை. இதில் அவர்கள் எப்பொழுதும் உறுதியாக இருந்தார்கள்.
1965ஆம் ஆண்டு பசுமை புரட்சி நிகழ்ந்த போது சிங்களக் குடியேற்றங்களுக்கு அந்த பசுமைப் புரட்சியின் வாயிலாக ஊட்டம் ஊட்டுவதில் டட்லி சேனாநாயக்க அரசாங்கம் கவனமாக இருந்தது. அப்போது அந்த அரசாங்கம் தமிழ்த் தலைவர்களுடன் கூட்டு வைத்திருந்ததை கருத்தில் கொள்வதும் இங்கு அவசியம்.
பெயரில் பசுமைப் புரட்சி, செயலில் சிங்களக் குடியேற்றங்களை வளம்படுத்தல் என்பதாக அரசாங்கம் தனது செயலை திறமையாக நிறைவேற்றியது.
அப்போது தமிழ்த் தலைவர்களின் கண்களில் மண்ணைத் தூவி தமது திட்டத்தை வெற்றிகரமாக டட்லி சேனாநாயக்க நிறைவேற்றினார்.
இவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றிய சிங்கள குடியேற்றங்களின் வாயிலாக கிழக்கில் தமிழ் மக்களை சிறுபான்மையினராக ஆக்க முடிந்துள்ளது.
அத்துடன் கூடவே முஸ்லிம் மக்களையும், தமிழ் மக்களையும் மோதவிடும் நோக்கில் வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் தடை என்கின்ற பிரித்தாளும் தந்திரத்தை தமிழ்த் தலைவர்களின் வாயாலேயே சிங்களத் தலைவர்கள் தற்போது அரங்கேற்றியுள்னார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான இலக்கு இந்திய ஆதிக்கத்திலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு கிழக்கை சிங்கள மயமாக்குவதற்கான சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது.
அத்துடன் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றி இந்தியாவிற்கு அனுப்பும் திட்டத்தையும் கொண்டதாக இருந்தது.
ஒருபுறம் ஈழத் தமிழர்களை அவர்கள் வாழும் பிரதேசத்தில் சிறுபான்மையினராக்கி பலம் இழக்கச் செய்ய சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது மறுபுறம் இந்திய வம்சாவழியினரின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாட்டை விட்டு இந்தியாவிற்கு துரத்துவது என்னும் இரண்டும் இந்திய எதிர்ப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இவ்வாறு சனத்தொகை ரீதியாக இலங்கையில் ஈழத்தமிழர், மலையகத் தமிழர் ஆகியோரை பலம் இழக்கச் செய்வதன் மூலம் இந்தியாவை இலங்கையில் பலமற்றதாக்குவது என்ற மூலோபாயம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் அரசியலை ஐ.தே.க மேற்கொண்டது.
அதேவேளை சுதந்திரக்கட்சியின் பிரதான இலக்கு தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களை, யாப்புக்களை உருவாக்குவது. இதன்படி 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், 1961ஆம் ஆண்டு நீதிமன்ற மொழிச் சட்டம், 1972ஆம் முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் அதில் சிங்கள மொழி, பௌத்த மதம், பௌத்த சாசனம் போன்ற அரசியல் யாப்பு ஏற்பாடுகள் பலம்மிக்கனவாக இடம் பெற்றன.
பின்பு இதனை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் 1978ஆம் ஆண்டு யாப்பில் பின்பற்றியதுடன் மேலும் அதனை நெகிழ்ச்சியற்றவாறு தமிழின அழிப்பிற்குப் பொருத்தமாக வடிவமைத்தார்.
முதலில் ஐ.தே.க தமிழரின் தாயக நிலக்கபளீகரக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றிய போது, சு.க சட்டரீதியாக தமிழினத்தை அழிக்கும் கொள்கையை நிறைவேற்றியது. அதற்காக ஐ.தே.க இத்தகைய சட்டங்களை உருவாக்குவதில் கவனமற்றது என்று சொல்வதற்கில்லை.
பிரேமதாஸவிற்கும், புலிகளுக்கும் இடையே 1980களின் பிற்பகுதியில் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்த போது வடக்கை புலிகள் பார்த்துக் கொள்ளலாம் ஆனால் கிழக்கை தாங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரேமதாஸா கூறியிருந்ததாக புலிகள் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
எப்படியோ கிழக்கை விழுங்குவது என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி விடாப்பிடியான உறுதிப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இந்தியாவுடன் தொடர்புபடுத்திய அவர்களது தீர்க்கமான நீண்டகாலப் பார்வை.
புவிசார் அரசியலில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலுத்த ஒருபோதும் நேரம் இருந்தது கிடையாது. இதனால் அத்துறை தமிழரின் அரசியலில் பாண்டித்தியமற்றுப் போய்விட்டது.
ஆனால் குடியேற்றமே புவிசார் அரசியல் அர்த்தத்தில் ஒரு கூரியவாள் என்பதை உணர்ந்து கொண்ட நிலையில் அதற்கான நடைமுறையை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
இப்போது வடக்கு – கிழக்கை பிரிப்பதற்கு முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும் இனவாதத்தின் இன்னொரு பக்கமாகும் என்பதே உண்மை.
சிங்கள ஆட்சியாளர்களிடம் சேர்ந்து எதனையும் பெறலாம் என்று நினைப்பது சுத்தத்தவறாகும். கடந்த காலங்களில் சேர்ந்து எதனையும் பெறமுடியவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழ்த் தலைவர்கள் சேர்ந்து பெறலாம் என்று கூறிய கருத்துக்கள் எதிர்மறையானதாகவே முடிந்துள்ளன.
தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து கொடுத்ததிலேயே முடிந்தது.
அதாவது தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பில் நிலப்பறிப்பு, சட்டரீதியான இன ஒடுக்குமுறை, வன்முறையான இனக்கலவர வடிவ அழிப்பு, இராணுவ ரீதியான அழிப்பு என பல அழிப்புக்களை இருகட்சிகளும் மாறி மாறி செய்துள்ளன.
முதலாவதாக கல்லோயா குடியேற்றத்திட்டத்தில் 1956ஆம் ஆண்டு தமிழ் விவசாயிகளுக்கு எதிரான இரத்தக்களரி ஆரம்பமானது. காலி முகத்திடலிலும், கல்லோயாவிலும் தொடங்கிய தமிழருக்கு எதிரான வன்முறைகள்தான் சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முதலாவது வன்முறையான யுத்தக் குற்றம். அப்போது பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்தார்.
தொடர்ந்து 1958ஆம் ஆண்டு பாரிய அளவில் பண்டாரநாயக்க இந்த இனக்கலவர வடிவ யுத்தக் குற்றத்தை மேற்கொண்டார். 1977, 1983ஆம் ஆண்டுகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை மேலும் கூர்மையாக மேற்கொண்டார்.
இப்போது இரண்டு கட்சிகளும் மாறி மாறி இந்த வகையிலான வன்முறைகளை மேற்கொண்டதைக் காணலாம். இதன்பின்பு இராணுவ வன்முறையை ஜெவர்த்தன அரசாங்கம் வடிவமைத்தது.
இந்த வகையில் இலங்கை இராணுவத்தை தமிழருக்கு எதிரான நவீன இராணுவமாக வடிவமைப்பதில் ஜெயவர்த்தனவின் முக்கிய அமைச்சரான லலித் அதுலத்முதலி பாத்திரமேற்றார். அவர்கள் வகுத்த இராணுவத் திட்டம் ஆப்பரேஷன் லிபரேஷன் என 1987ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் இரத்தக்களரியை உருவாக்கியது.
ஆனால் அப்போதை பனிப்போர் யுகத்தில் இந்தியாவின் தலையீட்டால் இலங்கை அரசு அதனை தவிர்க்க நேர்ந்தாலும் அதே திட்டத்தை மகிந்த ராஜபக்ச – கோத்தபாய ராஜபக்ச சகோதரர்கள் முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி வைத்தனர்.
ஆனால் அதனால் களங்கப்பட்ட, நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அரசையும், சிங்கள ஆட்சியாளர்களையும், சிங்கள இராணுவத்தினரையும் பாதுகாக்க தனித் தனியாக நின்ற இருபெரும் சிங்களக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தன.
ஆயினும் தமிழ்த் தமிழ்த் தலைவர்களுடன் கூட்டுச் சேராமல் அந்த யுத்தக் குற்றங்களையும், யுத்த வடுக்களையும், சர்வதேச நெருக்கடிகளையும் கடக்க முடியாத நிலையில் தமிழ்த் தலைவர்களுடன் கூட்டிணைந்தனர்.
இதில் சிங்களத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் கூட்டிணைந்து எதனையும் பெறவில்லை. மாறாக சிங்களத் தலைவர்களுக்கு தேவையான அனைத்தையும் தமிழ்த் தரப்பு கொடுப்பதிலேயே முடிந்துள்ளது என்பதையே இரண்டரை ஆண்டுகால பெறுபேறுகள் காட்டுகின்றன.
இதில் யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்கொள்ளத் தமிழ்த் தலைவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட உதவி பிரதானமானது. இப்போது அரசியல் யாப்புத் தீர்வு என்பது வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை என்ற விடயங்கள் வெளிப்படையாகிவிட்ட நிலையில் கிழக்கை இழந்த நிலையில் காணப்படும் துயரமே பெரியது.
கிழக்கு சம்பந்தமான ஒரு கொள்கையை வகுக்க தமிழ்த் தலைவர்கள் சுதந்திரம் அடைந்த ஆரம்பத்தில் இருந்தே தவறிவிட்டனர். தமிழ்த் தலைவர்களிடம் எந்தொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கான மூலோபாயங்கள் இருப்பதில்லை.
ஆனால் சிங்களத் தலைவர்கள் இதற்கு மாறாக நீண்டகால கண்ணோட்டத்துடனும் அதற்கான மூலோபாயத்துடனும் செயற்பட்டு வருகின்றனர். சிங்களத் தலைவர்களில் மிகவும் சாதுர்யமான தலைவர்களின் வரிசையில் பரண் ஜெயதிலக பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து டி.எஸ்.பெறுபேறு மிளிர்ந்தார். வெளிநாட்டு விவகாரம் பொறுத்து டி.எஸ்.சேனாநாயக்கவின் மூளையாக செயற்பட்டவர் ஒலிவர் குணதிலக என்பவராவார்.
அதேவேளை உள்நாட்டு அரசியல் பொறுத்து டி.எஸ்.சேனாநாயக்கவின் மூளையாக செயற்பட்டவர் இளைஞராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆவார்.
இந்த வகையில் மேற்படி நான்கு பேரும் சிங்கள அரசியலில் வெற்றிகரமான இராஜதந்திரிகளாவர். அவர்களின் இராஜதந்திரத்தின் கீழ் தமிழ்த் தலைவர்கள் இலகுவாகவே வீழ்த்தப்பட்டுவிட்டனர். இந்த நான்கு பேரினதும் தொடர்ச்சியில் வந்த நேரடி வாரிசாக ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார்.
தற்போதைய அரசியல் சூதில் இலங்கை அரசுக்கு இனவாத அர்த்தத்தில் வெற்றி தேடிக் கொடுக்கும் பிரதான விற்ப்பனராக ரணில் காணப்படுகிறார். அவர் உருட்டும் காயில் தமிழ்த் தலைவர்கள் எம்மாத்திரம்.
அரசாங்கத்திற்கு பழி சேராதவாறு கிழக்கை அவர் உருட்டிவிட்ட விதத்தில் மிகவும் நுணுக்கமான இராஜதந்திர மெருகு இருக்கிறது.
சிங்கள ஆட்சியாளர்களுக்கு உள்நாட்டு ரீதியான நெருக்கடிகளையும், வெளிநாட்டு ரீதியான அழுத்தங்களையும் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது.
இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது என்பது இனவாதத்திற்கு சேவை செய்வது என்பதிலேயே முடியும்.
-tamilwin.com
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.Thirunavukkarasu அவர்களால் வழங்கப்பட்டு 11 Jul 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை M.Thirunavukkarasu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.