காணாமற்போன ஆட்கள் பற்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள திருத்தச் சட்டம், எதிர்காலத்துக்கு மட்டுமே அமுலாகும் என்று, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படும் செயற்பாடுகளிலிருந்து, சகல நபர்களையும் பாதுகாத்தலுக்கான சர்வதேச சாசனத்தில், இலங்கையானது, 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதியன்று கைச்சாத்திட்டது.
அத்துடன், அதனை 2016ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதியன்று அரசாங்கம் அனுமதியளித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தச் சட்டமூலமானது, 2017ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதியன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னரே, அதற்குச் சட்டரீதியான அங்கீகாரம் வழக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அதற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதாவது, கடந்த 5ம் திகதியன்றே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், அன்றையதினம், லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான, சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆகையால்தான், காணாமற்போன ஆட்கள் பற்றிய திருத்தச் சட்டமூலத்தை பிறிதொரு தினத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து வாழ்கின்றவர்களைப் பலவந்தமாகக் கடத்துதல், காணாமலாக்குதல், சிறைப்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ்வதற்கான சுதந்திரத்தை ஸ்தாபிப்பதே, இந்த சட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறான சட்டத்தின் ஊடாக, வெள்ளை வான் கலாசாரம், அரச அனுசரணையில், எதிர்ப்பாளர்களைக் காணாமல் ஆக்குதல் ஆகியவற்றை முற்றுமுழுதாக இல்லாமற்செய்வதற்கான முற்றுப்புள்ளி வைத்தல் என்பவற்றுக்காக சகலரும் சந்தோஷமடைய வேண்டும்.
பலவந்தமாகவோ அல்லது தெரியாதனமாகவோ, காணாமல்போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக் குழுவை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வலியுறுத்தி, இந்த சர்வதேசப் பிரகடனம் தொடர்பில், முதன்முறையாக அதாவது, 1989ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதியன்று, கவனத்தைச் செலுத்தியிருந்த முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவே, இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-tamilwin.com