தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இழுவை மடித் தொழில் கெடுதியானது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார் என வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம், செயலாளர் என். வி. சுப்பிரமணியம், மற்றும் இணையத்தின் துணைத்தலைவர் ஜோசப் பிரான்சிஸ், பொருளாளர் அன்ரனிப்பிள்ளை மரியராசா ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தொடர்ந்தும் அவர்கள் கருத்து வெளியிடுகையில்,
இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடித் தொழிலுக்கெதிரான சட்டமூலத்திற்கெதிராக இந்தியாவின் தமிழக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் அர்த்தமற்றது.
தமிழக மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அன்பரொருவரும் டெல்லிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்.
இந்த நிலையில் அவர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்திற்கெதிராகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் அவராகப் பேசுகிறாரா? அல்லது யாராவது இவர் போன்றவர்களைப் பேச வைக்கிறார்களா? இந்தப் போராட்டத்தின் பின்புலத்திலுள்ளவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.
எங்களுடைய போராட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் 2004, 2010, 2013, 2014, 2015 பேச்சுவார்த்தைகளின் ஊடாகப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை இந்திய மீனவர்களுக்கான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் கடந்த 05 ஆம் திகதி டெல்லியில் அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. குறித்த அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தையின் போது டில்லியில் முதன் முறையாக மத்திய அரசாங்கம் இழுவை மடித் தொழில் கெடுதலானது.
அதனைத் தடுக்க வேண்டும் என எழுத்து மூல அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இழுவை மடித் தொழில் கெடுதியானது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக நாம் பல்வேறு அழுத்தங்களை வழங்கி வந்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாகப் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணை பல்வேறு சட்டச் சிக்கல்களை
ஏற்படுத்துமென்பதால் அரசின் ஊடாக குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுச் சட்டமூலம் ஏகமனதாகக் கடந்த 06.7.2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறுதியாக நாங்கள் இந்திய மீனவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போது இழுவைமடித் தொழிலை முற்றுமுழுதாக விலக்கி மாற்றுத் தொழில்களுக்குச் செல்வதற்கே தமிழ்நாட்டு மீனவர்கள் எங்களிடம் அவகாசம் கேட்டிருந்தார்கள்.
மாறாக இந்தத் தொழிலைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு அவர்கள் அவகாசம் கேட்கவில்லை.
இலங்கைப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவைமடித் தொழிலுக்கெதிரான சட்ட மூலத்திற்கெதிராக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான ஸ்டாலின், வைகோ, இராமதாஸ் ஆகியோர் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழ்நாட்டு மீனவர்களை ஏமாற்றி வாக்குகளைச் சம்பாதிப்பதற்கான ஒரு கபட நாடகம்.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இலங்கைப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவைமடித் தொழிலுக்கெதிரான சட்ட மூலத்தைக் கறுப்புச் சட்டமூலம் என்று கூறியுள்ளார்.
எங்கள் நாட்டிற்குள் எங்களுடைய வளங்களைப் பாதுகாத்து, எங்களுடைய மீன் அபிவிருத்தியைப் பெருக்கி அபிவிருத்தி அடைவதற்கும், எங்களுடைய சந்ததியை வாழ வைப்பதற்கும் தூர நோக்குச் சிந்தனையின் அடிப்படையில் எங்களுடைய தொடர் போராட்டங்களின் பலனாகக் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்நிய நாடு அத்துமீறி எங்களுடைய கடற்பரப்புக்குள் நுழைந்து எங்களுடைய வளங்களை அழித்தும், எங்களைப் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பிற்கும் உள்ளாக்கி வருவதைத் தடுப்பதற்கும் நீண்ட போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்குப் பெயர் கறுப்புச் சட்டமூலமா?
அல்லது உங்கள் மீனவர்கள் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழையாமல் தடுத்ததற்குப் பெயர் கறுப்புச் சட்டமா? அந்த நாட்டில் வளம் இல்லையென்றால் தங்கள் நாட்டு மக்களுக்கு வளத்தையோ, இடத்தையோ காண்பிக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் தலையாய கடமை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் கருணாநிதியின் மகனாகவுள்ள ஸ்டாலின் கறுப்புச் சட்டத்திற்கு எந்தவகையில் பொருள் கொள்கிறார்? எனவும் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையம் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com