எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 144வது நாளாகவும் இன்றும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் எந்த தீர்வுகளையும் வழங்காத நிலையில் குறித்த உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைவிட பலர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கள் போராட்டத்தை அரசு தீர்வு எதையும் வழங்காது வேடிக்கை பார்த்து வருகின்றது. நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இன்று வரையும் தீர்வுகள் எதுவும் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.