தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பில் துணை ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட நான்கு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே துணை ஜனாதிபதி பதவி தொடர்பிலான தமது யோசனைகளை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் வேண்டுகோளாக முன்வைத்துள்ளன.
இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனொரு கட்டமாக துணை ஜனாதிபதி பதவியும் உருவாக்கப்பட வேண்டும். பாராளுமன்ற ஆட்சிக் காலத்தினைக் கருத்தில் கொண்டு அந்தப் பதவியினை சிறுபான்மை இனங்களுக்குள் பகிர முடியும்.” என்றுள்ளார்.
-puthinamnews.com