நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுகின்றது என உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு படைகளின் சித்திரவதைகள் 2016/17 என்ற தலைப்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மீன் சூகா இந்த புதிய அறிக்கையை தயாரித்துள்ளார்.
அந்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது வரையில் தண்டிக்கப்படவில்லை.
மிகப்பெரிய இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதைக் கூடங்கள் மனிதக் கடத்தல்கள் அச்சுறுத்தி லஞ்சப் பணம் பறித்தல் போன்ற விடயங்கள் இந்த குற்றச் செயல்களில் அடங்கியுள்ளன.
தமிழர்களை சித்திரவதை செய்வது ஓர் வருமானம் தரும் வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.