காணாமல்போன ஆட்களின் குடும்ப உறவினர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல்போன ஆட்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்தப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
”காணாமல் போன ஆட்கள்” தொடர்பான விடயம் இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது.
அத்தோடு, காணாமல் போன ஆட்களுடைய குடும்பங்கள், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இவ்விடயத்தை முன்வைத்து, “காணாமல் போன ஆட்கள்” தொடர்பான பிரச்சினையை ஒரு திருப்திகரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்தும் பொருட்டு கடந்த பல மாத காலமாக அமைதியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, காணாமல் போன ஆட்களுடைய குடும்பங்கள் அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளதோடு பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது.
(1) தற்போதைய அரசாங்கம் கடமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வேளையில், கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடைய பெயர்களும், அவ்வாறு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களும் பகிரங்கப்படுத்தப்படும், அத்துடன்
(2) தற்பொழுது கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களும் பகிரங்கப்படுத்தப்படும், அத்துடன்,
(3) கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில ஆட்களைத் தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய தகவல்களை அறிந்து வைத்துள்ளதாகக் கூறப்படும் காணாமல்போன ஆட்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தகைய தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும், அத்துடன்
(4) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்கப்பட்ட காணாமல்போன ஆட்களின் அலுவலகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அப்பொழுது மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு படிமுறைச் செயற்பாடுகளூடாக, காணாமல்போன ஆட்களுடைய குடும்பங்கள் எதிர்நோக்கும் வேதனைகளை ஏற்கத்தக்க வகையில் ஒரு முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்.
உண்மையான தகவல்கள் கிடைக்காமையினால் ஏற்படும் நிச்சயமற்ற நிலைமை காரணமாக இக்குடும்பங்கள் தற்பொழுது முகங்கொடுக்கும் மன உளைச்சல்கள் இச் செயல்முறைகள் மூலம் முடிவுக்கு வரும்.
அதேவேளை, 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி ஆக்கப்பட்ட காணாமல்போன ஆட்கள்அலுவலகச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அவசியமான பிரகடனம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் மேலே (4)ல் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் நிறைவேற்றப்படுவதற்கான ஆரம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மேலே (1), (2),(3)ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை.
அதேவேளை, மேலே (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுவது, நடைபெறுகின்ற எல்லாச் செயற்பாடுகளிலும் காணாமல்போன ஆட்களின் குடும்பங்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானவையென்பதோடு,
இது தொடர்பான சகல செயற்பாடுகளும் வெற்றியடைவதற்கும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மிகவும் அவசியமானவையாகும்.
காணாமல்போன ஆட்களின் குடும்பங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இத்தகைய சகல செயல் முறைகளின் வெற்றிக்கும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அடிப்படையானவையென்பது மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.
காணாமல்போன ஆட்கள் அலுவலகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான ஆரம்பத்தில் அரசாங்கம் தன்னிடம் உள்ள தகவல்களை வெளியிடுவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பதனால் அவற்றை வெளியிட வேண்டியது முதற்படியாக அமையும்.
எனவே, அரசாங்கம் அவசர நடவடிக்கையாக மேலே (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும், அத்துடன் மேலே (4)ல் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பான செயற்பாடுகளைத் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் என்பதே இப்பிரேரணை மூலம் கோரப்படுவது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
-tamilwin.com