காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்தல், இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில், குறித்த முகாம்களை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதியளித்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை உடன் அமுலுக்கு கொண்டுவருதல் போன்ற நான்கு செயற்பாடுகளையும் உடன் செயற்படுத்துவது அவசியம் என்றும் இரா.சம்பந்தன் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீர்வுக்கான சகல செயற்பாடுகளும் வெற்றியடைவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை துரிதப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-puthinamnews.com

























