கடந்த ஒரு வார காலமாக நீதிபதி இளஞ்செழியன் தொடர்பாக இலங்கையின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நீதிபதி ஒருவரின் பல்வேறு விதமான வெளிப்பாடுகள், ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மத்தியில் கடவுளாக போற்றும் அளவுக்கு அமைந்துள்ளது.
தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் முதன்முறையாக மாற்று சிந்தனையை நீதிபதி இளஞ்செழியன் விதைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், அவரின் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
அவரின் இறுதி நிகழ்வுகள் நேற்று சிலாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி இளஞ்செழியன், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளை தத்தெடுப்பதாக அறிவித்தார்.
அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
நீதிபதியின் இந்த செயற்பாடு ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிங்களவர்கள் என சிந்திக்கும் பெருமைபட்டுக் கொள்ளும் மனங்களுக்கு நீதிபதி சிறந்த ஒரு பாடத்தை கற்பித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியனை போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்றால் கடவுளுக்கு சமமாக வணங்க முடியும் என ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இதேவேளை நீதிபதி இளஞ்செழியின் செயற்பாட்டின் பார்க்கும் போது கண்கள் கலங்குவதாகவும், உலகிற்கு சிறந்த நீதிபதியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் சிங்கள மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
தமிழர்களுக்கு எதிராக இனவாத போக்குடன் செயற்படும் சிங்கள அமைப்புடன் பெரும்பான்மை மக்கள் இணைந்துள்ளனர்.
கடந்த 70 வருடங்களாக கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் நீதிபதிகளை மாத்திரமே நாட்டில் காண்கின்றோம். பெரிய குற்றவாளிகளை தப்ப வைப்பவர்களே நமது நீதிபதிகள். பாரிய குற்றம் செய்தவர்களை விடுவித்து விட்டு சாதாரண குற்றவாளிகளை சிறையில் அடைப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் தமிழ் நீதிபதியிடம் உள்ள குணத்தில் ஒன்றையாவது சிங்களவர்களிடம் காண முடியுமா என பேஸ்புக்கில் தென்னிலங்கை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியனை இந்த உலகிற்கு கொடுத்த பெற்றோர் இன்று எந்தளவிற்கு மகிழ்ச்சியடைவார்கள் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் அரசியல்வாதிகளுக்காக எத்தனையோ உயர் அதிகாரிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படியானவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என ஒருவார்த்தையேனும் யாராவது கூறியிருப்பார்களா? நீதிபதியின் இந்த மனிதாபிமானம் இலங்கையர்கள் அனைவருக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளதென பேஸ்புக் பக்கத்தில் பாராட்டி சிங்கள மக்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் அரசியல்வாதிகளின் உயிர்களை பாதுகாக்க எத்தனையோ இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவ்வாறானவர்களை, குறித்த அரசியல்வாதிகள் மதித்ததும் இல்லை, அதனை கண்டுகொண்டதும் இல்லை.
எனினும் நீதிபதி இளஞ்செழியன் தனது உயிரை பாதுகாத்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் வீழ்ந்து அழுதார். பிள்ளைகளையும் தத்தெடுத்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நெகிழ்வான சம்பவம் இடம்பெற்றமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com