சமஸ்டி தீர்வை அரசாங்கம் மறுத்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்: செல்வம் அடைக்கலநாதன்

selvam-m.pவடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பத்தினை தர வேண்டும் என சர்வதேசத்திடம் நாங்கள் கேட்கும் நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப்படுகொலை மற்றும் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் அகிம்சை போராட்டம் தேவையற்றது. அது புதைக்கப்பட வேண்டும் என்ற போது தான் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி போன்றவர்கள் ஆயுதம் மூலமே இவற்றினை வெல்லமுடியும் என நினைத்த காரணத்தினால் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று இந்த ஆயுதப் போராட்டத்தினை பலர் கொச்சைப்படுத்துகின்றனர். இந்த ஆயுதப் போராட்டம் மூலமே இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையை சர்வதேசத்திற்கு தெளிவாக எடுத்துக்காட்டியதாகும்.

கிழக்கு மாகாண இளைஞர்களின் வீரம் என்பது ஆயுதப் போராட்டத்தில் மறக்க முடியாத இடத்தினைக் கொண்டுள்ளது.

அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டதும் இந்த மட்டக்களப்பு மாநகரம் ஆகும்.

கிழக்கு மாகாணம் ஈழப்போராட்டத்தில் தனது பங்களிப்பினை பெரியளவில் செய்துள்ளது. வடகிழக்கில் தனது இனத்திற்காக இரத்தம் சிந்திய இளைஞர்களின் வீரம் இன்று கொச்சைப்படுத்தப்படுகின்றது.

தமிழர்கள் ஒற்றுமையாக நீண்டகாலத்திற்கு செயற்படுவதில்லை. எங்களுக்குள் காட்டிக் கொடுப்போர் அதிகளவில் இருந்ததன் காரணமாக அகிம்சை போராட்டமோ ஆயுதப் போராட்டமோ வெற்றி பெற்றதான சரித்திரம் இருக்கவில்லை.

ஆயுதப் போராட்டத்தின் பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையில் போடப்பட்டுள்ளது. தமிழர்களுக்குள் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முக்கியமானவராக இருந்தவர் மறைந்த ஊடகவியலாளர் சிவராம் ஆகும்.

அதனை இங்கு நான் நினைவு கூருகின்றேன். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றியவன் என்ற காரணத்தினால் அது தொடர்பான விடயம் எனக்கு தெரியும்.

அந்த ஒற்றுமை வலுப்பெற வேண்டும் என நாங்கள் விடுதலைப் புலிகளை நாடினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை நிர்ணயிக்கின்ற சக்தியாகவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டதாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியும் என்னுடைய பதவியும் இருப்பதனால் அரசாங்கத்திற்கு அடிபணிந்து விட்டோம் என சிலர் கருதுகின்றனர்.

இந்த நாட்டில் இருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை இல்லாமல் செய்வதற்கு சர்வ தேசமும் தமிழ் மக்களும் முக்கிய காரணமாக அமைந்தன.

சிறுபான்மை மக்களினால் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது என கருதிய தென்னிலங்கைக்கு ஜனாதிபதி தேர்தல் மூலம் மாற்றத்தினை ஏற்படுத்திக் காட்டியவர்கள் இந்த தமிழ் பேசும் மக்களாகும்.

இன்று வடகிழக்கு மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் நிறைவேற்று அதிகார முறைமை இல்லாமல் செய்யப்படும். எனவே இவற்றுக்கு ஆதரவு வழங்குங்கள் என்று சர்வதேசம் கேட்கின்றது.

நாங்கள் துரிதமாக அனைத்தையும் தட்டிக்கழித்து இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தினை வழங்கக்கூடாது என்பதற்காகவே இன்று சில விட்டுக்கொடுப்புகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்கின்றது.

இணைந்த வடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்துவாழும் சந்தர்ப்பத்தினை தர வேண்டும் என சர்வதேசத்திடம் கேட்கும் நிலையேற்படும்.

வடகிழக்கில் எமது இளைஞர்கள் இரத்தத்தினை சிந்தினார்கள். இணைந்த வடகிழக்கினை பிரிப்பதற்கு யாராலும் முடியாது.

வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். சமஸ்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களது கொள்கையாகும்.

இதில் எந்த விடயத்தினையும் விட்டுக்கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்லாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். எங்களுக்குள் பிரிவுகள் இருந்தால் எமது இனத்தினை நாங்கள் காப்பாற்ற முடியாது.

எங்களுக்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. காணாமல்போனவர்களின் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம், மண்மீட்பு போராட்டம் என நியாயமான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். அதற்கான அழுத்தங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருகின்றது.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதனை ஓங்கியொலிக்க செய்தது ஆயுதப் போராட்டமாகும்.

சர்வதேசத்திடம் எமக்கான நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கேட்க வைத்தது இந்த ஆயுதப் போராட்டமாகும்.

ஐ.நாவுக்கு எமது பிரச்சினையை கொண்டு சென்றது இந்த ஆயுதப் போராட்டமாகும் என்பதை அதனை விமர்சிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்காக ஆயுதம் தூக்கி போராடிய நாங்கள் அந்த போராட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ளோம். நாங்கள் சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

புனித விடுதலையென்ற வார்த்தை அன்று ஒவ்வொறு இளைஞர் யுவதியிடமும் இருந்தது. அதனை இன்று பலர் மறந்து விட்டனர்.

அதனை வெளியில் கூறத் தயங்குகின்றனர். இயக்கங்கள் துன்பங்களையே சுமந்து நின்றன. சுகபோகங்கள் இயக்கங்களில் இருக்கவில்லை என்றார்.

-tamilwin.com

TAGS: