அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நிர்வாகத்துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு கட்டமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுகின்ற பணியகமான, பூகோள குற்றவியல் பணியகத்தை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், முதன்மையான ஒரு பிரிவாகச் செயற்படும் இந்தப் பணியகத்தை மூடிவிட்டு, பெது பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான உதவி இராஜாங்கச் செயலரின் கீழ் ஒரு உப பிரிவாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பூகோள குற்றவியல் பணியகமும் அதன் தூதுவராக இருந்த ஸ்டீபன் ராப்பும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட பெயர்கள் தான்.
இலங்கையில் நடந்த போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தியது, பூகோள குற்றவியல் பணியகம் தான்.
1997ம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு தனிப்பிரிவாக பூகோள குற்றவியல் பணியகம் செயற்பட்டு வந்தது.
உலக நாடுகளில் நடக்கின்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் போன்றவற்றைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்தி அது குறித்த சர்வதேச நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இந்தப் பணியகத்தை அமெரிக்கா உருவாக்கியிருந்தது.
ஒபாமா ஆட்சிக்காலத்தில் பூகோள குற்றவியல் பணியகத்தின் தூதுவராக இருந்தவர் ஸ்டீபன் ராப். இவர் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி அவற்றுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.
ருவாண்டா, சிராலியோன், கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இவரது காலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையிலும் போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி அதற்கு நீதி தேடுவதற்கான நகர்வுகளை ஜெனிவாவில் இருந்து முன்னெடுப்பதற்கும் இவர் ஒரு முக்கியமான காரணியாக இருந்தவர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக 2009ம் ஆண்டு ஒக்டோபர் 21ம் திகதியும் 2010 ஓகஸ்ட் 11ம் திகதியுமாக இரண்டு அறிக்கைகளை அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்தவர் ஸ்டீபன் ராப்.
இவரது அறிக்கைகள் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் தகவல்களை மாத்திரமன்றி, இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன.
கடைசியாக இவர் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இறுதிப் போர் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டிருந்தார். பூசா முகாமுக்குள் நுழைந்தும் தேடுதல் நடத்தியிருந்தார்.
அப்போது இவரது செயற்பாடும் அறிக்கைகளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன.
போரின் இறுதி மாதங்களில் அரசப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்பு விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் ஆனாலும் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டியெடுத்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து காயங்களையேனும் ஆற்றும்படி அவர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டவர்.
அமெரிக்காவின் பூகோள குற்றவியல் பணியகத்தை முழுமையாக வலுப்படுத்தியர் ஸ்டீபன் ராப் தான். அவரது இறுக்கமான போக்கும் செயற்பாடுகளும் தான் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனிதஉரிமை மீறல் விவகாரங்களில் அமெரிக்கா கடும் போக்கை எடுக்க காரணமாயிற்று.
ஆனாலும் சிரியாவின் போர்க்குற்ற விவகாரத்தில் ஒபாமா அரசு நிர்வாகத்துடன் முரண்பாடுகள் ஏற்பட்டு 2015ம் ஆண்டு முற்பகுதியிலேயே ஸ்டீபன் ராப் பூகோள குற்றவியல் பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து விலகினார்.
இவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தாமதித்து வருவதானது போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று கூறியிருந்தார்.
இலங்கை அரசாங்கம், வழக்குத் தொடுநர் பணியகத்தையும் உருவாக்க முடியும். அப்போது தான் போர்க்குற்ற வழக்குகள் இருந்தால் அதனை உடனடியாக ஆரம்பிக்க முடியும். இல்லாவிடில் உடனடியாக நீதிமன்றப் பணிகளை ஆரம்பிக்க முடியாது.
நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதை தள்ளிப் போடுவது அதனை முற்றிலுமாக தவிர்க்கின்ற ஒரு முயற்சியாக இருக்கக்கூடும்.காணாமற்போனோர் பணியக சட்டத்தின் மூலம் அரசாங்கம் சில தடைகளை அகற்றியுள்ளமை முக்கியமானது.
உண்மையைக் கண்டறிதலில் தான் நீதிச் செயல்முறைகள் ஆரம்பிக்கும். குற்றவியல் நீதி உண்மையைக் கண்டறியும் செயல்முறைகளில் தான் ஊற்றெடுக்க ஆரம்பிக்கிறது.உண்மையைக் கண்டறிதலில் இருந்து நீதியை வழங்குவது வரை இது முக்கியம் என்று கூறியிருந்தார்.
ஸ்டீபன் ராப்புக்குப் பின்னர் ஒபாமா அரசாங்கமே பூகோள குற்றவியல் பணியகத்தை பலவீனப்படுத்த ஆரம்பித்து விட்டது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தனிப் பணியகமாக இருந்த பூகோள குற்றவியல் பணியகத்துக்குப் பொறுப்பான அதிகாரியை தூதுவர் (ambassador at large) என்ற நிலையில் முன்னர் வைத்திருந்தது.
ஆனால் ஸ்டீபன் ராப்புக்குப் பின்னர் இந்தப் பணியகத்துக்குப் பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரொச் புச்வால்ட்டுக்கு பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் என்ற பதவியே அளிக்கப்பட்டது.
ஆனால் இப்போது றெக்ஸ் ரில்லர்சன் பூகோள குற்றவியல் பணியகத்தை தனிப்பிரிவு என்ற நிலையில் இருந்து பொது பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி இராஜாங்கச் செயலகத்தின் ஒரு உப பிரிவாக மாற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அதற்கேற்ற வகையில் பூகோள குற்றவியல் பணியகத்தின் சிறப்பு இணைப்பாளராக இருந்த ரொட் புச்வால்ட் இராஜாங்கத் திணைக்களத்தின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த மாற்றத்துக்கு ட்ரம்ப் நிர்வாகம் கூறுகின்ற காரணம் இந்தப் பணியகத்தின் ஆளணி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்காக ஆண்டுக்கு 3 மில்லியன் டொலரை வீணாகச் செலவிட வேண்டியுள்ளது என்பதேயாகும்.
ஆனால் அதற்கும் அப்பால் உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் அக்கறையற்ற போக்கையும் இது வெளிப்படுத்துவதாக ஒரு கணிப்பு உள்ளது. போக்குற்றங்கள் விடயத்தில் அமெரிக்காவின் அக்கறையும் பொறுப்பும் குறைந்து வருவதை இது காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஒபாமா அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக இருந்த ரொம் மாலினோவ்ஸ்கியும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான பணியகம் முக்கியமானது. போர்க்குற்களுக்கு பொறுப்புக்கூறுவதற்காக அன்றி குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கும் செயல்திறனுடன் செயற்பட வேண்டும. அதற்கு முன்னாள் வழக்குத் தொடுநர், நீதிபதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிபுணர் இதனை இயக்க வேண்டும்.
பூகோள குற்றவியல் பணியகத்தின் தற்போதைய வளங்களையும், அதிகாரிகளையும் தூதுவரையும் திணைக்களத்தின் எந்த இடத்துக்கும் மாற்றலாம். அது ஒரு பிரச்சினையல்ல.
ஆனால் இதன் தரம் குறைக்கப்பட்டு வளங்கள் கட்டுப்படுத்தப்பட்டால் அது பாரிய பின்னடைவாக இருக்கும் என்று அவர் அண்மையில் நியூயோர்க் டைம்சிடம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் இதனைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
அதேவேளை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் ஈடுபாடும் அக்கறையும் ஏற்கனவே குறைந்து விட்டமை கண்கூடு.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அமெரிக்கா தற்போது அக்கறை கொள்ளவேயில்லை.
ஏற்கனவே இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் பூகோள குற்றவியல் பணியகமும் மூடப்படுவது, இலங்கையின் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான சர்வதேச நகர்வுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
ஆனாலும் பூகோள குற்றவியல் பணியகத்தின் தூதுவராக இருந்த ஸ்டீபன் ராப், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் அமையப்போகும் ட்ரம்பின் ஆட்சி, உலகளாவிய நீதி தொடர்பாக வேறு விதமான பார்வையைக் கொண்டதாக இருக்கலாம்.
ஆனாலும் வாசிங்டனில் உள்ள அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள் என்பதே அவரது அந்தக் கருத்து.
அவரது கணிப்பு சரியானதாக இருக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-tamilwin.com