தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது: இரா.சம்பந்தன்

sambanthanபுதிய அரசியலமைப்பு வெளிவரும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் புதிய அரசியலமைப்பு, கிழக்கு மாகாணத்தின் இன்றைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்தினார்.

இதன்போது, உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,

தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு அரசியல் தீர்விற்கான அத்தியாவசிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம், அதிகாரப்பகிர்வு உட்பட அதனுடைய வரைபு வெளிவரும் வரையில் நாங்கள் பக்குவமாகவும் நிதானமாகவும் எங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றிய விளக்கங்களை கொடுத்து அதன் பின்னர் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற காணிப்பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள் கல்வியறிவு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அதில் ஏற்படுகின்ற தாமதங்கள் பற்றியும் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி வரைபு வெளிவந்த பின்னர் நாங்கள் மாவட்ட ரீதியாக தொகுதி ரீதியாக மக்களை சந்தித்து அது பற்றி விளக்கி மக்களின் கருத்துகளை அறிந்த பின்னர் தான் முடிவுகளை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமை சம்பந்தமாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு கலப்பு முறைத் தேர்தலாக இருக்கும். தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் இது நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் வாயிலாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழல் இருக்கின்றது.

அவ்விதமாக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட்டால் மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக அது அமையுமாக இருந்தால் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை மாகாண சபைகளுக்கு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அது முக்கியமானதொரு பொறுப்பாகும். அதனை கையாளக்கூடிய வகையில் அனைவரையும் தயாராக இருக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, அம்பாறை மாவட்ட உறுப்பினர் ராஜேஸ்வரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

 -tamilwin.com
TAGS: