யாழ். கோப்பாய் பகுதியில் வைத்து நேற்று பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொலிஸ்மா அதிபர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தாக்குதல் சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளியாவார். அவர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன், தொடர்புடைய மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவிகளையும் நாடவுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த நடவடிக்கையின் மூலம் குற்றச் செயல்களை வெகுவாக குறைக்கமுடிவதுடன், நிலைமைகளை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com