முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் இறுதி போரின் தடயங்களை அழிக்க அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. மேலும், இந்தப் பகுதிகளிலுள்ள கனியவளங்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றை சீனா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாகவும் இதைக் கருதலாம் என்று அவர் கூறினார்.
மேலும், இந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது என்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேலும் தெரிவித்தார்.