வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நிலை கடும் ஏமாற்றத்தை தருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இருப்பது உரிமைக்காக போராடும் மக்களுக்கு கிடைக்கும் பாரிய எமாற்றம் எனவும், எனினும், அந்த நிலைமைகளை காலப்போக்கில் விக்னேஸ்வரன் விளங்கிக் கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் செயற்பாடுகள் எதுவும் இல்லை. மாகாண சபையில் முதலமைச்சருக்கு அதிகாரம் கிடையாது. ஒற்றையாட்சியின் கீழ் செயற்பட கூடிய மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்பதே எமது கருத்து.
தமிழ் அரசியலை மாகாண சபைக்குள் கொண்டுச் சென்று முடக்கியதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். நாங்கள் இதனை ஒரு நாளும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது.
விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, எந்தவொரு ஜனநாயக அரசியல் கட்சியும் மாகாண சபை நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஒரு போதும் இதற்குள் போயிருக்க கூடாது.
துரதிஷ்டவசமாக கூட்டமைப்பின் பொய்களை விளங்கிக்கொள்ளாமல் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் முதலமைச்சர் வேட்பாளருக்காக தனது பெயரைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது என்பதே யதார்த்தம். அவர் மக்களின் நலன் கருதி ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் மத்திய அரசு அதை நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லை.
ஒற்றையாட்சியில் மாகாண சபைக்குள் அதிகாரம் கிடையாது. இந்த அரசியலை விளங்கிக் கொண்டு நாங்கள் முன்செல்ல வேண்டும்.
எவ்வாறாயினும், இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
-tamilwin.com