தமிழர் பண்பாடு சார்ந்த மாநாடுகள் வடக்கு, கிழக்கில் பேரெழுச்சியாக நடத்தப்பட வேண்டும்: யோகேஸ்வரன்

yogesஎமது இனத்தின் அடையாளம் மாறாது பாதுகாக்கப்படுவதற்குத் தமிழர் பண்பாடு சார்ந்த இது போன்ற மாநாடுகள் பேரெழுச்சியாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய 13 ஆவது பன்னாட்டு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்றைய தினம் (06) யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய மக்களிடமிருந்து பண்பாடு மறைந்து கொண்டிருக்கிறது. எமது மொழி கலப்பு மொழியாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது.

தமிழைத் தமிழாக உச்சரிப்பதும், தமிழர் கலாசாரங்களைப் பின்பற்றிச் செயற்படுவதும் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது.

இவ்வாறான நிலையில் எங்கள் மக்கள் தமிழர் பண்பாடுகளை உணர்ந்து செயற்படுவது அவசியம். வடக்கு, கிழக்கு மண்ணில் தமிழையும், ஆன்மீகத்தையும் வளர்த்தவரும், உலகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஆண்டு ஜனன தினம் இந்த ஆண்டில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு காலப்பகுதியில் தமிழ் உணர்வு சார்ந்த உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாடு நடாத்தப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த பல வருட காலமாக இவ்வாறானதொரு மாநாட்டை இலங்கையில் நடாத்த முடியாத அசாதாரண சூழலிருந்தது.

இதனால், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் எமது மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் சுவிஸ், பிரான்ஸ் , ஜேர்மன் போன்ற பல்வேறு நாடுகளில் மாநாடுகளை நடாத்தியிருந்தது.

இந்த மாநாடுகளில் எமது மக்கள் சார்பாக நானும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உருவாக்கம் பெற்ற யாழ்.மண்ணில் இந்த வருடம் தமிழர் பண்பாட்டு மாநாடு இடம்பெற்றிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

மாவை சேனாதிராஜா கிழக்கு மண்ணில் பெரும் சேவையாற்றியுள்ளார். கிழக்கு மண் என்றும் அவரை நினைவில் கொண்டுள்ளது. எமது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் அயராது பாடுபட்ட மாவை சேனாதிராஜாவுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பவள விழா எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ்மொழியைச் சரியாகப் பேசுகின்றவர்கள் கிழக்கு மாகாண மக்கள். ஆகவே, எதிர்வரும் காலத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பண்பாட்டு மாநாட்டை விமரிசையாக நாடாத்த முன்வர வேண்டும்.

அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாங்கள் தயாராகவிருக்கிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 -tamilwin.com
TAGS: