கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்!
ஈழத் தமிழர்க்கான செயல்பாட்டாளர்களின் இதயத்தில் முள்ளைப் போல பதிந்த இன்னொரு சம்பவம், தமிழீழத்தின் பிரபல மிருதங்க வித்வானாக விளங்கும் கணேசசுந்தரம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகும்.
விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் இயக்குநராக தணிகைமாறன் எனும் கண்ணதாசன் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் கீழ் செயல்பட்டவர்.
கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் பகுதியில் 2007 ஜனவரி மாதவாக்கில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக படையில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது 2014 மார்ச்சில் வழக்கு தொடுத்தார். அடுத்த ஆண்டே பயங்கரவாதத் தடுப்பு போலீஸால் கைது செய்யப்பட்ட கண்ணதாசன், பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
இது தொடர்பாக, வவுனியா மாவட்ட மேல்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், கடந்த 25ஆம் தேதி கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
முந்தைய தாக்குதலில் கொல்லப்பட்ட மெய்ப்பாதுகாவலர், சிங்களவர் என்பதும் தமிழரான நீதிபதி உயிர் தப்பியதுமே முக்கியமாக இலங்கை அரசாலும் சிங்கள அமைப்புகளாலும் பேசப்பட்டது. குறிப்பாக, இது முன்னாள் போராளிகளின் கைங்கர்யம் என்று சிங்களத் தரப்பு ஆட்சியாளர்களும் இனவாத அமைப்புகளும் அழுத்தமாகச் சொல்லி வருகின்றன.
இரண்டாவதாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணதாசன்! இவர், மிருதங்க வித்வான் என்பதைவிட, போராளி இயக்க முன்னாள் பொறுப்பாளர் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கைதுக்கு முன்பு வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையின் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார், கண்ணதாசன். முன்னதாக, முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் 2009-ல் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து போராளிகளுக்கான வதை முகாமில் அடைக்கப்பட்டார்.
இலங்கை அரசின் வார்த்தைகளில் சொல்வதானால், இராணுவத்திடம் சரணடைந்து, அவர்களால் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அதாவது மற்ற ஈழத் தமிழர் குடிமக்களைப் போல சகஜமான வாழ்க்கைக்குத் திரும்ப உகந்தவர்கள் என கண்ணதாசன் போன்ற 12 ஆயிரம் தமிழ்ப் போராளிகளை இலங்கை அரசு முகாம்களிலிருந்து விடுவித்தது. அதை நேர்மையாக நம்பி, வெளியில் வந்த போராளிகள் அவரவர் செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபட்டும் திறன்கள் மூலம் படையினர் அல்லாத பொது சிவில் வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.
விவரிக்க முடியாத இழப்பையும் சோகத்தையும் சுமந்து கொண்டு, ஈழத்து மண்ணில் உயிரோடு வாழவேண்டும் என்பதை ஒரு சவாலாக, அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். இந்த நம்பிக்கையைக் குலைக்கும்படியாகவே, பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணதாசனுக்கு, போர்க்காலத்தில் நடந்த குற்றம் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆம், இத்தீர்ப்பை வழங்கிய வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி, இலங்கை அரசின் சட்ட மா அதிபரின் வலியுறுத்தலின் காரணமாகவே தான் அப்படிச் செய்ததாகக் கூறியிருக்கிறார்.
கவனிக்க.. இனப்படுகொலை என்பதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் என மட்டுப்படுத்தி, இரு தரப்பும் குற்றமிழைத்தது என சமப்படுத்தினாலும் தமிழ்ப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக உலக நாடுகளுக்கு இலங்கை அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழியை அப்பட்டமாக மீறி, கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை விதித்திருப்பதற்கு ஈழத்தமிழர் தரப்பில் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்கக்கூட யாரும் தயாராக இல்லை.
ஊடகத்துக்குக் கருத்துக்கூறுவதென்றால் அதைவிட ஆபத்து போல!
நாம் தொடர்புகொண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்றவர்கள் கேள்வியைப் பெற்றுக்கொண்டு, பதில்சொல்ல இயலாது எனப் பூடகமாகச் சொல்கிறார்கள்.
மகிந்த ராஜபக்சேவைப் போல இல்லாமல், மைத்திரிபால சிறீசேனா ஆட்சியில் தமிழீழப் பகுதியில் அமைதி நிலவுகிறது; நல்லாட்சி நடக்கிறது என்கிற பிம்பம், இதன் மூலம் உடைந்து போய் இருக்கிறது.
புலம்பெயர் ஈழத்து எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான குணா கவியழகனிடம் இது குறித்துக் கேட்டதற்கு, “ வாதத்துக்காக, கண்ணதாசன் செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை என்றால், விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கத்தை அங்கீகரித்து சமாதான உடன்பாடு செய்துகொண்ட இலங்கையின் பிரதமர் ரனிலுக்கு தூக்குதண்டனைதான் தரவேண்டும். ஆம், இலங்கை அரசமைப்புச் சட்டத்தை மீறித்தானே, புலிகளின் தலைமையோடு அவர் ஒப்பந்தம் செய்துகொண்டார். புலிகளின் அரசியலமைப்பான தமிழீழ சட்டக்கோவையின்படி 18 வயது நிரம்பிய எவருக்கும் கட்டாய ராணுவச் சேவை உண்டு; அதன்படி படைக்கு ஆட்களைச் சேர்க்கும் எத்தனையோ பேரில் ஒருவர்தான், கண்ணதாசன்” எனச் சீறுகிறார்.
மேலும், “ உள்நாட்டுப் போரில் நடந்த தவறுகளை, இலங்கையின் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கமுடியாது; இதைப் போர்க்குற்ற அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்றம்தான் விசாரிக்கமுடியும். 80-களில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய சிங்கள ஜே.வி.பி. இயக்கத்தினருக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது; இதைப் போல அவர்கள் மீது எந்த வழக்கும் பதியக்கூட இல்லை. அவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்ப் போராளிகளுக்கு ஒரு நீதியா?
இந்தத் தீர்ப்பின் மூலம் ஈழத்தமிழரின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் மீது எந்த வழக்கும் போடலாம், எப்படியான தீர்ப்பும் வழங்கலாம் என மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராளிகளுக்கு ஆள் சேர்த்தது எனக் கூறுபவர்கள், வட-கிழக்கின் 80 சதவிகிதமான ஈழத்தமிழர்களை, போராளிகளுக்கு நிதி கொடுத்ததாகவோ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் புலிகளின் நிர்வாகப் பணியாளர்களாக இருந்ததாகவோ மீண்டும் சிறையில் தள்ளலாம். இந்த ஆபத்தை தமிழர் தரப்பு முறியடித்தாக வேணும்” என்கிறார் குணா கவியழகன்.
ஐநா மனித உரிமைப் பேரவையில் தூயவான் வேடம் பூணும் இலங்கை அரசாங்கம், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கோ வேறு எதற்கோ, தமிழர் எதிர்ப்பு- சிங்கள இனவாதத்தை மீண்டும் கையிலெடுத்திருப்பது,(என்று விட்டது?), ஈழத்தமிழர் மீதான இன்னுமொரு போராகவே இருக்கும்!
-இரா.தமிழ்க்கனல்
வழிமூலம் – விகடன்