அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது அவர்களின் சொந்த விவகாரமல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகத் தான் அவர்கள் அரசியல் கைதிகள் ஆனார்கள் என பிரபல அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் “அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று யாழில் நேற்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளது விவகாரம் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உரியது. தமிழ் மக்கள் இந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலவிட முடியாது.
அரசியல் தலைமைகள் வேண்டுமானால் விலகிப் போகலாம். ஆனால், மக்கள் இந்த விடயத்தில் விலகிப் போக முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் போராட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
குறித்த பேரணியின்போது கலந்து கொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் எங்கு பார்த்தாலும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற அவல நிலையை எங்களுடைய அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
உங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். எனவே, இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுங்கள் என்று கூறினார்கள். அந்தக் கோரிக்கைக்கு அமைவாக எங்களுடைய மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த தலைமைகள் தற்போது இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற கோடாரிக் காம்புகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான அரசியல் தலைமைகளை, அரசியல் களத்திலிருந்து நீக்கினால் மாத்திரமே எங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.
-tamilwin.com