முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது.
அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விலகியிருக்கின்றார்.
தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி சார்பு அமைச்சராகத் தமிழரசுக் கட்சி கருதவில்லை. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரிடம் நேரடியாகத் தெரிவித்து விட்டார்.
ஆக, இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும், வடக்கு மாகாண அமைச்சரவையில் இல்லை. மாகாண சபையின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வருடம் மாத்திரமே உள்ள நிலையில், இன்னொரு தமிழரசுக் கட்சிக்காரர் அமைச்சராவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.
வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சி விலகும் நிலை ஏற்பட்டதற்கு, ஒரு வகையில் அந்தக் கட்சியும் காரணமாகும். அது ‘பூமரங்’ போன்றதொரு தாக்கத்தினால் நிகழ்ந்திருக்கின்றது. ஏனெனில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை நியமனத்தின் போது, தமிழரசுக் கட்சியும் அப்போது தமிழரசுக் கட்சிக்குள்ளேயே குலாவிக்கொண்டிருந்த விக்னேஸ்வரனும் எடுத்த முடிவுகள், ஜனநாயக விரோதமானவை. பொ.ஐங்கரநேசனும் பா.டெனீஸ்வரனும் அவர்கள் அங்கம் வகித்த கட்சிகளின் முடிவுகளுக்கு எதிராக, அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள். குறிப்பாக, ஐங்கரநேசன் விக்னேஸ்வரனின் விருப்பத்துக்கேற்பவும், டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தேவைக்கேற்பவும் அமைச்சர்களாக்கப்பட்டார்கள். அது, பங்காளிக் கட்சிகளின் முடிவுகளின் மீது, தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் ஏறி நின்று நர்த்தனமாடிய தருணங்கள். அதுபோல, புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அப்போது மாகாண சபைக்குள் அங்கம் வகித்த போதும் அவரை அமைச்சராக்குவதைத் தவிர்த்ததோடு, பங்காளிக் கட்சியென்கிற வகையில், புளொட்டுக்கான அமைச்சர் இடமும் மறுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை அண்மையில் தன்னுடைய நூறாவது அமர்வை நடத்தியது. இந்த நூறு அமர்வுகளில் 350க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த அமர்வுகளுக்காக இதுவரை, ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண சபை நிகழ்த்திக் காட்டிய சாதனையாக இவற்றையே கோடிட்டுச் சொல்ல வேண்டியிருக்கின்றது. மாறாக, தமிழ் மக்களுக்காக முற்போக்கான அபிவிருத்தித் திட்டங்களையோ, அல்லது சிறந்த தலைமைத்துவத்தையோ மாகாண சபையோ, முதலமைச்சரோ வழங்கியிருக்கின்றார்களா என்று கேட்டால், பதில் ஏமாற்றமானது.
ஜனநாயகத் தன்மைகளைப் பேணுதல் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாகவோ, அமைப்புகளாகவோ, கட்சிகளாகவோ முன் நிற்கும் பலரிடம் அந்த ஜனநாயகத் தன்மைகளைக் கிஞ்சித்தும் காண முடிவதில்லை. அத்தோடு, ஏக நிலை அதிகாரமொன்றுக்கான போட்டியில் ஒட்டுமொத்தக் காலத்தையும் கடத்தி, விடயங்களைக் கோட்டை விடுகின்றார்கள். வடக்கு மாகாண சபைக்குள் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுதான்.
தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், வடக்கு மாகாண சபையை மாத்திரமல்ல, தமிழ் அரசியல் சூழலையே முடக்கி வைத்திருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் அதியுச்ச அதிகார நிலையொன்றை அடைவது தொடர்பில் விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆசையில் மண் விழுந்தது முதல், தமிழரசுக் கட்சிக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அதுவரை, தமிழரசுக் கட்சி, இழுத்த எல்லாப் பக்கத்துக்கும் சென்ற முதலமைச்சர், தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட புள்ளியிலிருந்து விலகிநிற்க ஆரம்பித்தார். அன்று, ஆரம்பித்த முரண்பாடுகளுக்கான தொடக்கம், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அதிகம் பிரதிபலித்தது. அது, அவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும் வைத்தது.
எப்போதுமே அவசரப்பட்டு, விடயங்களைச் சொதப்புவது தொடர்பில் விக்னேஸ்வரன் கவனம் பெற்று வந்திருக்கின்றார். பங்காளிக் கட்சிகளை ‘இரத்தக்கறை தோய்ந்தவர்கள்’ என்று அழைத்தது முதல், அண்மையில் ‘போர்ப்பயிற்சி பெற்றவர்களினால் குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன’ என்று கூறியது வரை, அவரின் நிதானமில்லாத வார்த்தைகள், அவரைச் சிக்கலுக்குள் தள்ளியிருக்கின்றன. சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட பின்னர், அவர் அதிலிருந்து பின்வாங்கி விளக்கமளிக்கின்றேன் என்கிற போர்வையில் உரைகளை வாசிப்பது ஒன்றும் புதியதில்லை. அண்மையில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகளை, தான் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் என்று கூறவில்லை என்று விளக்கமளித்தமை வரை நிகழ்ந்திருக்கின்றது.
மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் தொடர்பிலான நிதானமில்லாத பேட்டியொன்றினாலேயே கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் அதிகமாக முழிக்க வேண்டி ஏற்பட்டது. அதன்போக்கில், அவர் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளை நோக்கி நல்லெண்ண சமிஞ்ஞைகளையும் காட்டிக் கொண்டிருந்தார். எனினும், மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக அமைந்ததால் அவர் இரா.சம்பந்தனின் காலடியில் சரணடைய வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டது.
ஆனால், பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பில், கொந்தளித்த தமிழரசுக் கட்சியின் கோபம், இன்று வரை குறையவில்லை. குறிப்பாக, மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களுடனான தன்முனைப்பு (ஈகோ) நிலையை விக்னேஸ்வரனும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை. அதன்போக்கிலேயே, வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சிக்குள் கூட்டம் சேர்க்கும் வேலை ஆரம்பமாகியது. அவர்கள், சுமந்திரனின் ஆட்கள், இவர்கள் விக்னேஸ்வரனின் ஆட்கள் என்கிற நிலை உருவாகியது. அந்தத் தருணத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நிலையை எடுத்து அணி மாறியவர்களும் உண்டு
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை என்பது மிக முக்கியமானது. நீண்ட போரியல் வரலாற்றைக் கொண்ட தரப்பொன்றை எதிரிகள் உருத்தெரியாது அழித்தொழித்த பின்னரும், மீண்டு எழுந்து வருவோம் என்று ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் மாகாண சபைத் தேர்தலையே ஒரு வாய்ப்பாக எடுத்து நிரூபித்துக் காட்டினார்கள். அந்தப் போராட்ட குணத்தையும் அதன் வலுப்பொதிந்த செய்தியையும் ‘நான் நீ’ என்கிற தன்முனைப்புப் பிற்போக்குத்தனங்களினால் கோட்டை விட்டதில் தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் முக்கியமானவர்கள்.
இன்றைக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியதனூடு, தன்னுடைய கௌரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது என்கிற செய்தியை தமிழரசுக் கட்சி நிறுவ முயற்சிக்கலாம். அதாவது, எல்லாப் பிரச்சினைகளுக்கும் விக்னேஸ்வரனை நோக்கி விரல்களை நீட்ட முடியும் என்றும் அந்தக் கட்சி நம்புகின்றது. ஏனெனில், இனி ஒரு வருடமும் நிகழப்போகும் மாகாண சபை விடயங்கள் சார்ந்தோ அல்லது அமைச்சுகளின் விடயங்கள் சார்ந்தோ எந்தப் பொறுப்பையும் தாம் ஏற்க வேண்டியதில்லை. மாறாக, விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்துக் கொள்வதினூடு விடயங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தமிழரசுக் கட்சி திட்டமிட்டு செயற்பட்டிருக்கின்றது.
இன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் கருத்துகளினால் ஆளுமை செலுத்தப்பட்டு, அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றார். அந்த நிலை அவரை மாத்திரமல்ல, மாகாண சபையையும் அவரை நம்பிக்கையாகக் கொண்டிருக்கின்ற தரப்புகளையும் சேர்த்தே அல்லல்பட வைக்கின்றது.
விக்னேஸ்வரனை சுற்றியிருக்கின்ற சில தரப்புகள் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பில் பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றன. அதற்காக விக்னேஸ்வரனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதுகின்றன. அந்த விடயம் அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவரின் நிதானமில்லாத மனநிலையும் தமிழரசுக் கட்சிக்காரர்களுடனான தன்முனைப்பும் சரியான வழிகளை அடையாளம் கண்டு கொள்வதைத் தவிர்க்க வைக்கின்றது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்கள். ஆனால், தனக்கு வேண்டப்படாதவர்கள் என்கிற நிலையில், மற்ற இருவரையும் பதவி நீக்குவது தொடர்பில் விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய இயற்கை நீதிக்குப் புறம்பான நிலையே அடுத்தடுத்துப் பெரிய சிக்கல்கள் உருவாக்குவதற்கு காரணமானது. அதன் அடிப்படைகளில் அதிகம் தெரிந்தது என்னவோ, தன்முனைப்புக் கோளாறுதான். இவ்வாறான நிலைகளைச் சமாளித்து விடயங்களைச் சீராக்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகளிலும் அவர் அதிகளவில் விடாப்பிடியாக இருந்ததன் விளைவு, ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகல் வரை வந்திருக்கின்றது.
இந்த இடத்திலிருந்து தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு தெளிவான வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அது, விக்னேஸ்வரன் என்கிற பெயர் உச்சரிக்கப்படாத மாகாண சபைத் தேர்தலொன்றை வடக்கில் அடுத்த முறை எதிர்கொள்ள முடியும் என்பது தொடர்பிலானது. ஏனெனில், இனி வரப்போகும் ஒரு வருட காலத்தில் அந்தப் பயணத்தையே பங்காளிக் கட்சிகளுக்கும் புரிய வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும். இறுதியில், விக்னேஸ்வரன் இல்லாத தமிழ் அரசியல் ஒன்றுக்கான சூழல் உருவாக்கப்படும். அதன் நன்மைகளையும் தீமைகளையும் தமிழ் மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அதை உருவாக்கியவர்களாக தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் வரலாற்றில் குறிக்கப்படுவார்கள்.
-புருஜோத்தமன் தங்கமயில்
4TamilMedia