தமிழகத்தில் போராட்டம் வலுத்தாலும் இலங்கை அரசின் கொள்கை மாறாது! மகிந்த அமரவீர

aaxxதமிழ் நாட்டில் எத்தகைய போராட்டம் நடத்தப்பட்டாலும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை அரசு கைவிடாது என கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. நேற்றைய தினமும் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதற்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

இந்நிலையில், மீனவர் விவகாரம் குறித்து அந்நாட்டின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகளை நடத்தி வருகின்றோம். அவை ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன.

கடந்த ஆட்சியில் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டாலும் படகுகளுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நிலைமை மாறியது. எந்த காரணம் கொண்டும் படகுகளை விடுவிக்கவில்லை.

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது.

மேலும், யுத்தத்திலிருந்து மீண்ட வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 -tamilwin.com
TAGS: