வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு!

r_sambanthan_001வடக்கு மக்களின் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை தெற்கு! – இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று சம்பந்தனிடம் பிரிட்டன் எம்.பிக்கள் குழு வாக்குறுதி (photos)

“வடக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கில் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று நினைக்கின்றோம்.”  இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவினர் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். தமது பயணத்தின் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தப் பேச்சுத் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை முக்கியமானது என்று அவர்களுக்கு எடுத்துரைத்தேன். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அவர்களது அன்புக்குரிய உறவுகள், தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறுமாறு அரசிடம் தொடர்ச்சியாகக் கேட்டுவருகிறார்கள். அரசு பதில் வழங்கவில்லை.

மக்களின் காணிகளில் இராணுவம் ஒருபோதும் இருக்கமுடியாது. மக்களின் காணிகளைப் பிடித்து அதில் இராணுவம் விவசாயம் செய்கின்றது. காணிகளின் உரிமையாளர்களான மக்கள் நடுத்தெருவில் நின்று போராட்டம் நடத்துகின்றனர். காணிகள் சில விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்கள் விரும்பிய காணிகள் விடுவிக்கப்படவில்லை.

அரசு சில விடயங்களைச் செய்திருந்தாலும் அதன் வேகம் போதாது. இனியும் இழுத்தடிப்புக்கு அனுமதிக்கமுடியாது.

புதிய அரசமைப்பு  கொண்டுவரப்படுவதன் ஊடாகத்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர  தீர்வைக் காணமுடியும். நாட்டில் அனைவரும் சமத்துவத்துடன் வாழக்கூடிய அரசமைப்பு நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது என்று தெரிவித்தேன்.

தாம் நாடு முழுவதிலும் சென்று மக்களைச் சந்தித்தாக அவர்கள் கூறினர். வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தெற்கிலுள்ள மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று நினைக்கின்றோம். உங்கள் பிரச்சினைகளுக்கு  எங்கள் நாட்டின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்போம் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” -என்றார்.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

-tamilcnn.lk

TAGS: