இலங்கை அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது! சம்பந்தன்

sambanthan_001மனித உரிமை விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சம்பந்தன்,

நியாயமான தீர்வு ஒன்றை எட்ட முடியாத சந்தர்ப்பத்தில் இன்னும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள்.

இயன்றளவு அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் சம்மதத்துடன் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி தேசியப் பிரச்சினைக்கு முடிவுகாண அரசாங்கம் முன்வர வேண்டும்.

காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காணி விடுவிப்பு, உள்ளிட்ட பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.

இதேவேளை, சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை அமெரிக்க அரசாங்கமானது உறுதி செய்ய வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

-tamilwin.com

TAGS: