கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாயார் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமையை மதிக்கின்ற நாட்டிற்கு நல்ல விடயம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 6 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவர்களில் மூன்று தாய் மார்கள் உயிரிழந்துள்ளனர். இது நியாயமான விடயம் அல்ல. இவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும். இவர்களுக்கு நீதியை வழங்குபவர்கள் யார்.?
இராணுவத்தினரால் கையேற்கப்பட்டவர்களே இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணு வீரர் ஒருவரின் துப்பாக்கியை விட தாய் மார்களின் கண்ணீர் வலிமையானது.
அந்த கண்ணீர் இந்த நாட்டிற்கு சாபமாக அமைந்து விடும். எனவே இதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். நீதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு நீதி வழங்கப்படா விட்டால் நிலைமை வேறு விதமாக அமைந்து விடும்.
இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் நீதி வழங்க முடியாமல் இருக்கின்றது.? இந் நிலையில், இரணைதீவு மக்களும் 100 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் வறட்சி, வேறு சில பகுதிகளில் இயற்கை அனர்த்தம், அரசியல் கட்சிகளுக்கு உட்பூசல் என இந்த நாட்டினுடைய நிலைமை அமைந்துள்ளது.
இந்நிலையில். மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் புகையிலையினால் பல மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வடக்கு மக்கள் புறந்தள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக புகையிலை உற்பத்தி சார்ந்த 14 வகையான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது புகையிலை உற்பத்தியாளர்கள் கண்ணீர் விட்டழுதனர்.
தனது வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது தெரியாது அழுதார்கள். எனவே அவர்களுக்கு ஒரு மாற்றுத்திட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
மேலும், வடக்கில் தற்போது நுன்நிதி கடன் நிறுவகங்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் கடனை செலுத்த முடியாது பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
எனவே, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் செயற்பட்டு வரும் நுன்நிதி கடன் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com