50 வீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர்! இரா.சம்பந்தன்

sambanthar_tnaஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் நலனுக்காக அல்லாமல் தமது அரசியல் எதிர்காலத்திற்காக செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கியமான பிளவுப்படுத்த முடியாத இலங்கை என்ற அடிப்படையை கொண்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என சிங்கள அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இதன் மூலம் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் சில இனங்களுக்குள் காணப்படும் சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

இலங்கை தமிழ் மக்களின் 50 வீதத்திற்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு சென்றுள்ளனர். துரிதமான தீர்வு கிடைக்காது போனால், எதிர்காலத்தில் மேலும் தமிழ் மக்கள் நாட்டில் இருந்து வெளியேறலாம்.

தமிழ் மக்களுக்காக மாத்திரம் குரல் கொடுக்கவில்லை எனவும், முழு இலங்கை மக்களுக்காகவும் தான் குரல் கொடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: