தமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது: சுரேஷ்

suresh_premachchanthiran_001எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் கலாச்சாரம், பண்பாடு என்பன ஒன்றித்துப் போயுள்ளது. எமது மொழி, சமயம், வாழ்க்கை முறை என்பவற்றையொட்டி எமது பண்பாடுகளும், நாகரீகங்களும், பழக்க வழக்கங்களும் அமைந்துள்ளன.

ஆகவே, இவை அழிக்கப்படும் போது எமது இனம், மொழி, நாகரீகம், பண்பாடு என அனைத்தும் அழிக்கப்படும். இதனைக் கலாசாரப் பேரழிவு என்று குறிப்பிடலாம்.

இவ்வாறான கலாசாரப் பேரழிவை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

அகில இலங்கைச் சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாட்டின்முதலாம் நாள் நிகழ்வு இன்று யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் கோலாகலமாக ஆரம்பமானது.

மாநாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யாழ். நாவற்குழியில் ஏற்கனவே ஒரு புத்தபெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சட்ட விரோதமான சிங்களக் குடியேற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் பிரமாண்டமான பெளத்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு அண்மையில் இராணுவம் அடிக்கல் நாட்டியது.

இதற்கெதிராக மக்களால் சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது இலங்கையில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, நாவற்குழியில் பெளத்த விகாரையை அமைக்கலாம் என நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இலங்கையில் பெளத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக பெளத்த மக்கள் இல்லாத சைவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றதொரு பிரதேசத்தில் பெளத்த மதத்தைத் திணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது இனத்தை அழிப்பதற்கு பல்வேறு பட்ட சூழ்ச்சிகள் பிரயோகிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது மொழியை, சமயத்தை, பண்பாட்டை, கலாசாரத்தை பாதுகாப்பதற்காக மிகவும் நீண்டகாலமாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

எமது கலாசாரம், பண்பாடுகள் என்பவற்றை அழித்தொழிப்பதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இலங்கை இராவணனால் ஆளப்பட்டதொரு சிவபூமி. 2500 வருடங்களுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தருகின்ற காலகட்டத்தில் இலங்கையில் ஐந்து ஈஸ்வரங்கள் காணப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், பொன்னீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்களும் காணப்பட்டது.

தற்போது ஐந்து ஈஸ்வரங்களுக்கும் என்ன ஆனது? பொன்னீஸ்வரம் என்பது இல்லாமலேயே போய்விட்டது. திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு முன்பாக புத்தபெருமானுடைய மிகப்பெரிய சிலை நாட்டப்பட்டிருக்கிறது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைச் சூழவும், யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரர் ஆலயத்தைச் சூழவும் பெளத்தமயக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

பெளத்த மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக சைவசமயத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான சைவ ஆலயங்களும், ஏனையஆலயங்களும் அழிக்கப்பட்டன.

குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன. தற்போது அந்த ஆலயங்கள் மீளக் கட்டியெழுப்பட்டு வளர்ச்சியடைந்து வரும் சூழலில் அரசாங்கம் இராணுவத்தின் துணையுடன் பெளத்த மதம் இல்லாத பிரதேசங்களில் பெளத்த ஆலயங்களை அமைத்து வருகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் கலாசாரப் பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், தமிழர்களின் பண்பாடு, நாகரீகம் என்பவற்றைச் சிதைக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

கன்னியா வெந்நீருற்று பழமை வாய்ந்த காலத்தில் இலங்கையை ஆண்ட இராவணனால் தனது தாயாருக்கு ஈமக் கிரியைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் அந்தப் பகுதியில் பெளத்த துறவியொருவர் நிரந்தரமாகத் தங்கிப் பிழைப்பு நடாத்தி வருகிறார்.

மூதூரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழரின் பாரம்பரியச் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

நயினாதீவில் கடல்பகுதியில் 67 அடி உயரமான புத்தபெருமானின் சிலை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு முழுவதும் ஒருகாலத்தில் சிவபூமியாக விளங்கினாலும் கூட அதனை மாற்றும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டுப் பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தி வருகிறது.

அம்பாறையில், திருகோணமலையில் ஏற்கனவே பெளத்த மயமாக்கல் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது வடக்கு முழுமையாகக் குறி வைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நாங்கள் வெளிப்படையாகப் பேசினால் இனவாதிகளாகவும், ஏனைய மதங்களுக்கு எதிரானவர்களாகவும் நாங்கள் சித்தரிக்கப்படுகின்றோம்.

உண்மையில், நாங்கள் ஏனைய மதங்களுக்கோ,இனங்களுக்கோ எதிரானவர்களல்ல. எம் ஒவ்வொருவருக்கும் எமது மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றப் பூரண உரித்திருக்கிறது.

அந்த உரித்தைப் பெரும்பான்மைப் பலம் கொண்டு நசுக்குகின்ற போது நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்க முடியாது.

திருக்கோணேஸ்வரம் ஆலயமும் எங்கள் கைகளை விட்டுச் செல்லுமட்டும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? என அண்மையில் கிறிஸ்தவ பாதிரியாரொருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

எங்களுடைய சமயத்தை, கலாசாரத்தைப், பண்பாட்டை, மொழியைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பும், கடமையும் எங்கள் மண்ணின் இளைஞர், யுவதிகள் மத்தியிலுள்ளது.

தமிழ்மக்களின் பாரம்பரிய கலாசாரங்களை எமது மண்ணில் நிலைநிறுத்த வேண்டிய, எமது சமயத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் இளைஞர்கள் இடமுள்ளது.

பாராளுமன்றத்திற்குச்சென்ற எமது அரசியல் வாதிகள் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவார்கள் என்பதை விடுத்துத் தமிழ் இளைஞர், யுவதிகள் எமது கலாசாரம், பண்பாடு, மொழி , சமயம் அனைத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது கலாசாரம், பண்பாடு என்பவற்றை நிலைநிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் இவ்வாறான சைவ மாநாடுகள் உறுதுணை புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: