திருகோணமலையில் எங்களுக்கு அடி விழுகிறது எனத் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் யாழில் மனம் குமுறியுள்ள சம்பவம் பலரையும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு மிக உருக்கமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாங்கள் இன முரண்பாடுகளுக்குக்கிடையில், வலிகள், வேதனைகளுக்கு மத்தியில் தான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம்.
எமது மண்ணில் எமது இருப்பு வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள இடம் முழுவதும் பெளத்தர்களின் சொத்தாகி விட்டது.
அங்கிருந்த பிள்ளையார் ஆலயம் 1983 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. இந்த ஆலயத்துடன் சேர்த்து 18 ஆலயங்களை அழித்தார்கள். இவ்வாறு அழிக்கப்பட்ட பகுதியில் எங்களால் மீண்டுமொரு ஆலயத்தை நிர்மாணிக்க முடியவில்லை.
எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனின் சொந்த மண்ணில் தான் எங்களுக்கெதிரான பல்வேறு அநியாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் சூழலில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி ஒரு மரத்தைக் கூட வெட்ட முடியாது. அனுமதியின்றிக் கட்டடங்கள் எதுவும் நிர்மாணிக்க முடியாது.
ஆனால், பெளத்த விகாரைகள் தாராளமாகக் கட்டப்படுகின்றன. எமது தொன்மையின் சான்றுகள் எமது கண்முன்னாலேயே அழிக்கப்படுகின்றன.
திருகோணமலையின் குச்சவெளிப் பகுதியில் பழமை வாய்ந்த தொண்டீஸ்வரம் ஆலயமுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தற்போது மண்ணால் மூடி வைத்திருக்கிறார்கள்.
காரணம் கேட்டால் தொல்பொருட் திணைக்களத்தின் அனுமதியுடன் மூடியிருக்கின்றோம் என்று சொல்கிறார்கள். எங்களுடைய தொன்மை வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக எங்களுடைய வரலாறு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
தமிழருடைய தொன்மைகளை இல்லாமலாக்கும் வகையில் நாளாந்தம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களுடைய இளைஞர்கள் எழுச்சியுறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
எங்களுடைய அடையாளமான கன்னியா வெந்நீருற்றுப் பறி போய்விட்டதே என அவர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
திருகோணமலையில் எங்களுக்கு அடி விழும் போது யாழ்ப்பாணம், மன்னார் போன்ற வடக்குப் பகுதியிலுள்ள இளைஞர்கள் குமுற வேண்டும். இவ்வாறான ஒன்றிணைவு தற்போதைய காலத்தின் தேவை எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
-tamilwin.com