இந்த மண்ணிலே நடைபெற்ற இனப்படுகொலை எமது மக்களை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்காகவும் , தமிழ் மக்களின் இரத்தத்தை குடிப்பதற்காகவும் பேரினவாதிகளால் ஏவப்பட்ட ஒரு படுகொலையாகவே இதைப் பார்க்கின்றேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 27 வருடங்கள் நிறைவையொட்டி நேற்று வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நிகழ்வு முன்னாள் கிராம உத்தியோகத்தர் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தப் படுகொலையை செய்வதற்காக மாற்று இனத்தவர்களை தூண்டி விட்டு அவர்கள் மூலம் எமது தமிழ் மக்களின் உயிர்களை பறித்து எமது இனத்தினை அடியோடு இல்லாமல் செய்து விடலாம் என்ற சிந்தனையிலே இப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது.
இன்றும் எமது இனத்திற்கான நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறவில்லை அதனால் தங்களுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாதவர்களாகவே எமது மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்திலே ஆட்சி நிலவ வேண்டும் என்று எமது கட்சியினர் முஸ்லிம்களுக்கு முதலமைச்சரைக் கொடுத்தார்கள் ஆனால் இன்று அந்த முதலமைச்சர் சரியான பார்வையுடன் செயற்படவில்லை.
எமது தமிழ் கிராமங்களை புறக்கணித்து நடக்கும் நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அன்று எப்படி எமது இனத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்தார்களோ அதே போன்று தான் இன்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆட்சியாளர்கள் செய்து வருகின்றார்கள்.
இந்த கிழக்கு மாகாணத்திற்கு சிறந்த தமிழ் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அந்த தமிழ் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் கிழக்கில் முதலமைச்சராக வருபவர் தமிழ் முதலமைச்சராக வரவேண்டும் அவ்வாறு வரும் போது தான் தமிழ் மக்களினது வலி தொடர்பாக சரியான முறையில் உணர்ந்து சரியான அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்ல வாய்ப்பு ஏற்படும்
ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
-tamilwin.com