வாழைச்சேனையில் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை பிரதேச பொது மக்களால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் வாக்குகளால் வந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவித கரிசனையும் காட்டுவதில்லை. அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் இதில் அக்கறை காட்டுவதில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களாகிய எங்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இது நல்லாட்சி அரசாங்கம் இல்லை போலி அரசாங்கம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பெரிதும் ஏக்கத்துடன் வாழ்ந்து வருவதுடன், பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியாமல் தந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவார்கள், இவர்களின் உறவுகளுக்கு உதவிகளை வழங்குவார்கள் என்று எதிர் பார்த்தோம். எனினும் இந்த நல்லாட்சி என்று கூறும் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை.

யுத்தத்தின் போது தமிழ் மக்களை கொன்றதும் இல்லாமல், தமிழ் மக்களை கைது செய்து சிறையிலும் அடைந்து வைத்துள்ளனர்.

எனவே நல்லாட்சி வேடம் பூண்டுள்ள அரசாங்கம் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: