தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. யுத்தத்தின் போது மனிதவுரிமைகள் மீறப்பட்டது தொடர்பில் அரசாங்கத்தின் மீதும், புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா என்று அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் கால அவகாசம் வழங்கப்பட்டு மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த 2000 ஆண்டுகளின் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரை விட மிகப்பெரும் பலமாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் நடந்த பெரும்பாலான போர்முனைகளில் புலிகளின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்.நகரை புலிகள் மீண்டும் கைப்பற்றும் நிலையும் இருந்தது. இந்நிலையில் தான் நோர்வை என்றொரு நாடு ஈழத் தமிழ் மக்களுக்கு அறிமுகமாகின்றது. அதுவரை சாதாரண ஒரு ஈழத்தமிழனுக்கு நோர்வே என்றொரு நாடு இருந்ததாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நோர்வையின் அனுசரனையுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்ததான பேச்சு வார்த்தைககள் ஆரம்பிக்கின்றன. இதில் இந்தியா மறைமுகமாக தலையிட்டிருந்தது என்பதும் வெளிப்படையான உண்மையாக இருக்கின்றது.
குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஈடுபட்டிருந்தார். அவர் சமாதான தூதுவர் வேடம் ஏற்றபோது, ஈழத் தமிழ் மக்களிடத்தேயும், தமிழ் ஊடகங்களிலும் அதிகம் பேசப்பட்ட நபராக மாறியிருந்தார்.
அவரை பலமாக ஈழத்தமிழர்கள் நம்பியிருந்தார்கள். சமாதான ஒப்பந்தம் நிரந்தர தீர்வினைக் கொண்டுவரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் அவரின் முயற்சி தோல்வியில் தான் முடிவடைந்தது.
2000 ஆண்டுகளில் பெரும் பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பலவீனப்படுத்தப்பட்டார்கள் என்பது போர்முனை மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்திருந்தது.
புலிகளைப் பலவீனப்படுத்தவே இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் பல்வேறு விதமான எடுத்துக்காட்டுக்களை அடுக்கியிருந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு கொடிய போரும் நிறைவடைந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பு இன்று இல்லை.
ஆனால், சமாதான தூதுவரும், மற்றொரு தரப்பமான இலங்கை அரசாங்கமும் இருக்கிறது. சமாதான ஒப்பந்த காலத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து நிச்சையமாக இந்த இரண்டு தரப்பிற்கும் தெரியும்.
இப்பொழுது முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மெல்ல வாய் திருந்திருக்கிறார். அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் குறிப்பிட்ட விடையங்களை அவதானிக்கலாம்.
இரகசியங்களும், மறைக்கப்பட்டதன் பின்னணியும்
இன்று வெளிப்படையாக பேசியிருக்கும் சமாதான தூதுவர் தான் முதன் முதலாக இலங்கையில் செயற்பட முனைந்த போது சில விடையங்கள் மறைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் போது, அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க அந்த முயற்சியினை யாருக்கும் பகிரங்கப்படுத்தவில்லை. அதனை அவர் இரகசியமாக வைத்திருந்திருக்கிறார்.
அதுபற்றி கொழும்பில் இரண்டு பேருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஒருவர் சந்திரிகா குமாரதுங்க. மற்றவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த இரகசியம் பேணப்பட்டது. அதற்குப் பின்னரே பகிரங்கப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது முதலாவது சந்திப்புத் தொடர்பாக, அப்போதைய இலங்கை பிரதமர் கூட அறிந்திருக்கவில்லை என்பது அவரின் வெளிப்படையான கருத்து.
பிரபாகரன் குறித்து சமாதான தூதுவர் சொன்னது? நடந்ததும்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ள அவர்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவு, நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா என்பது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், உலகிலுள்ள வேறெந்த வெளிநாட்டவரையும் விட, பிரபாகரனை நான் அதிகமாக – அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் தமிழ் மக்களைப் பொதுவாகச் சந்திப்பது வழக்கம்.
இலங்கையின் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவை ஒருமுறை சந்தித்திருக்கிறார். சில சிங்களவர்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால் தமிழ் மக்களை அவர் எப்போதும் சந்தித்து வந்தார்.
அவருடன் இன்னும் கூடுதலான நேரத்தை செலவிட்டிருந்தால், நாம் பெரும்பாலும், அவர் மீது இன்னும் செல்வாக்குச் செலுத்தியிருக்க முடியும். பிரச்சினைகள் பற்றி பேசுவதன் மூலம் அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த நாங்கள் முயன்றோம். அவர் உண்மையில் அதுபற்றி அக்கறை கொண்டிருந்தார்.
அவர் நிச்சயம் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். உணவு விடயத்தில், அவர் ஒரு நல்ல சமையற்காரராக அறியப்பட்டார். இயற்கை மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனாலும் தனிப்பட்ட உறவை வளர்ப்பது கடினமாக இருந்தது. ஏனென்றால், எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருந்தது. மேலும் இலங்கை அரசாங்கத்தினால், வடக்கிற்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
அதைவிட, மொழித் தடையும் இருந்தது. அவர் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள எமக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். இறுதியாக அவர் வெளிப்படையாக திறந்த நிலையில் இல்லாத பாத்திர வகையாகவே இருந்தார்.
கவர்ச்சிகரமானவராக, ஆனால், இன்னும் அதிகம் மூடிய, எச்சரிக்கையுடன் அவர் இருந்தார்.
பாலச்சந்திரனின் படுகொலையும், அதன் சிக்கல்களும்?
தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கும் அவர், பிரபாகரனின் 12 வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம்.
அத்துடன், பிரபாகரன் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தனக்கு தெரியாது. இது முற்றிலும், மிக மோசமான பொறுப்பற்ற, தீய செயல். இந்த விடயத்தில் இலங்கை படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்.
பிரபாகரனை தமிழ் மக்கள் எவ்வாறு பார்த்தார்கள்? சமாதான தூதுவரின் பார்வையில்,
பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரபாகரனை முதல்தடவையாகச் சந்திப்பதற்கு நான் சென்றிருந்த போது, இலங்கையில் யாருமே அதனை அறிந்திருக்கவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார். இது பிரதமருக்கு கூட தெரியாது. நாங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசத்தில் பிரபாகரனைச் சந்தித்தோம். அதற்காக நாங்கள் உலங்குவானூர்தியில், சென்றிருந்தோம்.
தாழ்வாகவும், மேலுயர்ந்தும் பறந்து சென்றது அது. மலைகளாக இருந்திருந்தால் பயங்கரமாக இருந்திருக்கும். நாங்கள் செல்வதை இராணுவத்தினரோ, விடுதலைப் புலிகளோ அறிந்திருக்கவில்லை. அதனால் அவர்கள் இலகுவாக சுட்டு வீழ்த்தக் கூடும்.
அங்கு நாங்கள் பிரபாகரனைச் சந்தித்தோம். அது ஒரு நல்ல சந்திப்பு. அமைதி முயற்சிகளில் அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.
ஆனால், தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் மகத்தான நிலையை நிலையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் அவர் கடவுளாக, படைப்பின் மூலமாக, மீட்பராக போற்றப்பட்டார். தமிழ் மக்கள் ஏன் அவரை அப்படிப் போற்றினார்கள் என்று எம்மால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.
போரின் இறுதிக் கட்டமும், சமாதான தூதுவரின் செயல்பாடும்
புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்த போது, தாம் நேரடியாக பேசவில்லை என்றும், வேறொரு நோர்வேஜிய சகாவே அவருடன் பேசினேன்.
அத்துடன், இந்த உரையாடலின் போது, தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளிக்க முடிந்தது.
அது மே 17ஆம் நாள். அது நோர்வேயின் தேசிய நாளும் கூட. அதனால் அந்த நிகழ்வகளை நினைவில் வைத்திருக்கிறேன். ஒஸ்லோவில் அணிவகுப்புக்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது, புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவர் விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். இலங்கை இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.
நான் அவருடன் நேரடியாகப் பேசவில்லை. ஆனால், நாங்கள் தலையீடு செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது என்று நோர்வேஜிய சகா ஒருவர் அவருக்கு கூறினார். ஏனென்றால் போர் முடிவுக் கட்டத்தை நெருங்கி விட்டது.
நாம் தலையீடு செய்வதற்கு சாத்தியங்கள் இருந்த போது, போராட்டத்தைக் கைவிடுவதற்கு முன்னர் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தோம் என்பதை நாம் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினோம். ஆனால் இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது.
பெரியதொரு வெள்ளைக்கொடியை ஏந்திச் செல்லுங்கள். ஒலிபெருக்கிகள் மூலமோ வேறெந்த வழியிலோ உங்களின் எண்ணத்தை, இலங்கை ஆயுதப் படைகளுக்கு தெரியப்படுத்துங்கள், என்பதைத் தான் எம்மால் உங்களுக்கு கூற முடியும்.
எமது பக்கத்தில் இருந்து இலங்கை தலைவர்களுக்கு சரணடைய விரும்பும் உங்களின் விருப்பம் தெரியப்படுத்தப்படும் என்று அவரிடம் நாம் கூறினோம்.
அதன்படியே, நிச்சயமாக அதனை இலங்கை தலைவர்களுக்கு தெரியப்படுத்தினோம். நாங்கள் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான பசில் ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தினோம்.
நாங்கள் மட்டுமல்ல, முக்கியமான சில தமிழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்தனர். சில இந்தியா இடைத்தரகர்களும் கூட, இலங்கை தலைமைக்கு தகவல் அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு நாள் கழித்து. நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை.
அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், சரியாக எனக்குத் தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை.
இந்தக் கொலைகள் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி உள்ளது. ஏன் அவர்கள் சரணடைதலை ஏற்றுக் கொள்ளவில்லை, நீதிமன்றத்தில் நிறுத்தாமல், அவர்களை ஏன் கொன்றார்கள்…? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக, ஒரு சமாதான தூதுவரின் இந்தக் வெளிப்படையான கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் தன்னுடைய சார்பில் பதில் அளிக்குமா என்பது தான் கேள்வி. அது மாத்திரமல்லாது அவர் இறுதியாக ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
அதாவது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை ஏற்றுக் கொள்ளமால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் எதற்காக கொன்றார்கள் என்பது தான் சமாதான தூதுவரின் மிகப் பெரும் கேள்வியாக அமைந்திருக்கிறது.
நிச்சையம் இந்தக் கேள்வி அடுத்த மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கான பதிலை இலங்கை தெரிவிக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில் இதுவரை போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொடுக்கப்பட்ட எந்தவொரு கேள்விகளுக்கும் இலங்கை தரப்பில் இருந்து சரியான பதில்கள் வரவில்லை என்பது தெரிந்ததே.