வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாரப்படுத்தி அந்தப் பொருத்து வீடுகளை எமது மக்களின் தலையில் கட்டி இலாபம் சுருட்ட முயன்றவர்களின் நிலைப்பாட்டை மக்கள் இப்போது புரிந்துகொள்ள வேண்டும்.
பொருத்து வீடுதான் என்று மீள்குடியேற்ற அமைச்சும், அமைச்சரும் ஒற்றைக் காலில் நின்றனர்.
ஆனால், எமது முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதியே தமக்குக் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு மூலம் ஐம்பதாயிரம் கல் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதை நாம் வரவேற்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருத்து வீடு எமது மக்களுக்கு ஏற்புடையதல்ல, அது பொருத்தமற்றது என்பதை நாம் வலியுறுத்தினோம். அதை உணர்ந்து, ஏற்று அரசு உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கருதுகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கல் வீடுகளுக்கு மக்கள் விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுப் பயனடைய வேண்டுகின்றோம் என்றார்.