எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றுகிறது:கேப்பாப்பிலவு மக்கள்

கடந்த ஆறு மாதங்களாக தெருவில் இருந்து போராடுகின்ற எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றி வருகின்றது என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தங்களது பூர்வீகக் காணியை விடுவிக்கக்கோரி இன்றும் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், கேப்பாப்பிலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் நேற்றுடன் 176 ஆவது நாள்களைக் கடந்துள்ளது.

கேப்பாப்பிலவு இராணுவத் தலைமையகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நல்லாட்சி அரசாங்கமானது கால அவகாசங்களைக் கோரி எங்களை வீதியில் காத்திருக்க வைக்கின்றதே தவிர, எங்களது நிலத்தை விடுவிக்கவில்லை. இனியும் நாங்கள் வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு கட்சிக்காரர்களும், அரசியல்வாதிகளும் இங்கு வந்து செல்கின்றார்கள். தங்களுக்குக் கால அவகாசம் கேட்கின்றார்களே தவிர, எமக்குச்சரியான தீர்க்கமான பதிலைப் பெற்றுத்தரவில்லை.

அரசு மற்றும் அரசியல் வாதிகள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.நாங்கள் வீதியில் இப்படியே இருந்து மடிய வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.

அரசு முடிவு எடுத்திருந்தால் காலத்தை இழுத்தடிக்காமல் எங்களுக்குத் தீர்வைத் தந்திருக்கலாம்.போராட்டத்தில் வயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளர்கள், என்று பல தரப்பட்டோர் இருக்கின்றோம். அவர்களைப் பற்றியாவது சிந்தியுங்கள்.

போராட்டக் காலங்களில் நாம் பல அவலங்களைச் சந்தித்திருக்கின்றோம். நிம்மதி இல்லாமல் இருக்கின்றோம்.ஒரு அரசியல்வாதியாவது ஒரு நாள் இரவும், பகலும் எங்களுடன் இருந்து பாருங்கள் எங்கள் வலி உங்களுக்குப்புரியும்?என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்குவதாகக் கூறிய 148 மில்லியன் நிதி கிடைத்ததும், முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன கடந்த 15 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் 148 மில்லியன் ரூபா வழங்குவதாகக் கூறியிருந்தார்.

நிதி கிடைத்த பின்னர் முல்லைத்தீவு இராணுவத்தின் முக்கிய முகாம்கள் வேறிடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் அதனடிப்படையில் முல்லைத்தீவில் உள்ள 111 ஏக்கர் காணி விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாடுகளின் தூதுவர்களுக்குக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

காணி விடுவிப்புத்தொடர்பில் அரச தலைவருடன் நேரடியாகப் பேச்சு நடத்தியிருந்தார். இப்படியே இந்த நல்லாட்சி அரசாங்கமானது கால அவகாசங்களைக் கோரி எங்களை வீதியில் காத்திருக்க வைக்கின்றதே தவிர, எங்களது நிலத்தை விடுவிக்கவில்லை. இனியும் நாங்கள் வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை என இந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-tamilwin.com

TAGS: