நாட்டில் தொடர்ச்சியாக பல முக்கியமான தேர்தல்கள் நடைபெற இருப்பதால்,
போருக்கு முந்தைய இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இன விகிதாசாரங்களை கணிப்பிடும்போது நாட்டில் அமைதிச் சூழல் நிலவிய காலத்தில் உள்ள விகிதாசாரங்களையே கணிப்பிட வேண்டும். யுத்தத்தால் நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். மக்கள் வெளியேறுவதற்கு முன், இருந்த விகிதாசாரமே கருத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கக் கூடும். இவ்வாண்டில் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அரைவாசி காலம் இவ்வாண்டுடன் முடிவடையவுள்ளது. எனவே அபிவிருத்திப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டிய தறுவாயில் நாம் உள்ளோம்.
திருகோணமலை மாவட்டத்தின் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரப்படி, தமிழர்கள் 42 சதவீதமும் முஸ்லிம்கள் 32 சதவீதமும், சிங்களவர்கள்26 சதவீதமாகவும் இருந்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் எற்பட்ட யுத்தத்தின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிலர் தஞ்சம்புகுந்துள்ளனர். இவர்களும் நாட்டிற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் பற்றிப் பேசக் கூடாது.” என்றுள்ளார்.
-puthinamnews.com