பொதுவாக வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றுச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எங்களுக்கு அனுபவம் குறைவாகவுள்ள காரணத்தால் திறம்பட இயங்க முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒரு தடவை கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசியலாளர்கள், புத்திஜீவிகளால் கடும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் ஏற்பாட்டில் “வடக்கு மாகாண சபையும் வரலாற்று அநாமதேயங்களும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள D.M.I தனியார் கல்வி நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரதி அதிபருமான பொ. ஸ்ரீஸ்கந்தராஜா, யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் அமைப்பாளர் சொ. சிவபாலன், தென்மராட்சி கல்வி வலய ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், யாழ். கல்வி வலய ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ஏ.சி.ஜோர்ஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரேமதாச இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் தினம்தோறும் அதிகாலை 03 மணிக்கே துயிலெழுந்து தமது கொள்கைகள் முழுவதையும் தன் செயலாளர்களிடம் கையளித்துச் செயற்படுத்துவார்.
பிள்ளையான் கல்வியறிவில் குறைவான தகுதியைக் கொண்டிருந்த போதிலும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது அவருடைய நிர்வாகத் திறமை சிறப்பாகவிருந்ததாகத் தற்போது பலரும் புகழ்ந்து மெச்சுகிறார்கள்.
அனுபவம் என்பது அவசியமில்லை. ஆனால், கொள்கை அவசியமானது. வடக்கு மாகாண முதல்வரிடம் கொள்கையில்லாத காரணத்தால் தான் வடக்கு மாகாண சபை வினைத்திறனற்ற வகையில் செயற்பட வேண்டியுள்ளது எனவும் அரசியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய சூழலில் கிழக்கு மாகாண சபையிலும் எமது மக்கள் நம்பிக்கை இழந்து போய் விட்டனர்.
ஒரு தமிழ்ப் பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் மக்கள் நம்பிக்கையில்லாமல் தற்போது ஒரு சிங்களப் பிக்குவிடம் சென்றமையால் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது.
பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்தமைக்காக தமிழ் அதிபரால் குறித்த பிக்கு பொன்னாடை, மாலை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு பிக்குவிடம் சென்று தமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் நிலைமைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் வாதிகளுக்குச் செல்வாக்கில்லை. தெற்கிலுள்ள தமிழ் அரசியல் வாதிகளும், கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல் வாதிகளும் தற்போது சரணாகதி அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிக்கு குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. அதற்காக அவர்கள் குழப்ப வருகிறார்கள் என்று சொல்ல முடியாது.
ஒரு பிக்குவால் ஒரு தமிழ்ப் பாடசாலையின் பிரச்சினை தீர்க்குமளவிற்கு ஏன் எங்களுடைய தமிழ் அரசியல் வாதிகளால் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க முடியவில்லை?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் பலவீனம் தான் வடமாகாண சபையின் பலவீனமாகவுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவதே ஒரு கட்சியின் நோக்கமாகவுள்ளது.
ஒரு மத்திய ஆட்சி அல்லது துணை ஆட்சியைக் கைப்பற்றுவது தான் ஒரு கட்சியின் நோக்கம். வடக்கு மாகாண சபையை முதல் அனுபவம் என்று கூறினாலும் நீண்ட காலமாக அரசு கோரின கட்சி என்ற அடிப்படையில் நீண்ட கால அனுபவமும், ஆட்சியில் ஆசையும் காணப்படுகின்றது.
மக்கள் துன்பப்படும் வேளையில் இவர்களுக்கு என்ன வகுப்பா வைக்க வேண்டும்? எனவும் அரசியலாளர்கள் , புத்திஜீவிகளால் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
-tamilwin.com