மனிதப் படுகொலைகள் விடயத்தில் ஜெனரல் ஜயசூரிய குற்றமிழைத்தார்

fonsekaஇறுதிப் போரின் போது மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட சில குற்றங்களுடன் இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்புபட்டுள்ளார்.

அது குறித்து நான் அறிவேன். அவருக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டால் சாட்சியமளிப்பேன். இவ்வாறு, இறுதிப் போரை வழிநடத்திய இலங்கை இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பிரேசில் நாட்டுத் தூதுவராக இருந்தவரான ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக அந்த நாட்டில் மனித உரிமைகள் குழுக்கள் போர்க் குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

அவர் தூதுவராக இருந்த 5 நாடுகளில் இதுபோன்ற மேலும் வழக்குகள் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படுகின்றன. வழக்குத் தாக்கல் செய்யப்படுவதை அறிந்த ஜெகத் ஜயசூரிய நாடு திரும்பி விட் டார்.

பதவிக் காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்பினார் என்று கொழும்பு அயலுறவுத் துறை அமைச்சு அறிவித்தது.

நாடு திரும்பிய ஜெகத் ஜயசூரிய, போரின் போது தான் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை என்றும், சரத் பொன்சேகாவே போருக்கான கட்டளைகளை வழங்கினார் எனவும் தெரிவித்தார்.

போரில் ஈடுபட்ட படையினரை மின்சாரக் கதிரைகளில் இருந்து பாதுகாத்து விட்டதாக இந்த அரசு மார்தட்டுகின்ற போதும் பன்னாட்டு நீதிமன்றங்களில் படையினர் நிறுத்தப்படும் அச்சுறுத்தல் நீங்கவில்லை என்றும் அதற்கான உத்தரவாதத்தை ஐ.நாவிடம் இருந்து அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் போரை வழிநடத்திய இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

ஜெகத் ஜயசூரிய என்ற அதிகாரியை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டாம் என்று அப்போதைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவிடம் நான் கூறினேன். அவரைவிட 17 மூத்த அதிகாரிகள் இருந்தனர்.

அவர்களைத் தவிர்த்து, அப்போதைய அரச தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் தமது நலன்களுக்காக இளநிலை அதிகாரியான ஜெகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நியமித்தனர்.

நான் போரை வழி நடத்திய போது ஜெகத் ஜயசூரிய வவுனியாவில் கட்டளைத் தளபதியாக இருந்தார். அங்குள்ள பதுங்கு குழிகளை அவதானித்துக் கொள்வதே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக இருந்தது.

சிப்பாய்கள் அவரின் கீழ் இருந்தனர். போர்க்களத்தில் படையணிகளுக்கு சேவைகள் வழங்கும் பணி அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் போரை வழி நடத்தவில்லை.

குற்றமிழைத்தார்

போரில் கைது செய்யப்படுகின்றவர்கள் அவரின் கீழ் இருந்தனர். அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சில குற்றங்கள் அவரால் இழைக்கப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

அவர் இராணுவத் தளபதியானதன் பின்னரும் அந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாக நான் கருதுகின்றேன். அந்தக் குற்றங்கள் தொடர்பில் என்னிடம் தகவல்கள் உள்ளன.

உரிய சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின், சாட்சியளராக முன்னிலையாகி, அந்தக் குற்றங்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிப்பேன். அவர் குற்றமிழைத்தார் என்பதை நான் அறிந்திருந்தேன்.

அவை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நான் முயற்சித்தேன். ஆரம்ப நடவடிக்கையாக அவரின் உதவியாளராக இருந்த லெப்டினன்ட் ஒருவரைக் கைது செய்தேன். அந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது என்னை இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கினர்.

ஜெகத் இழைத்த குற்றங்களுக்கு, அப்போதைய ஆட்சியாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் ஆசீர்வாதம் கிடைத்ததற்கான தகவல் என்னிடம் உள்ளது. சட்டரீதியான நடவடிக்கை இடம்பெற்றால், வெளிநாட்டு நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஜெகத் ஜயசூரிய இழைத்த குற்றங்கள் தொடர்பில் நாட்டின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அது நடைமுறைப்படுத்தப்பட்டால், நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் எனது கடமையை நான் நிறைவேற்றுவேன் என்றார்.

அந்தக் காலத்தில் நீங்கள்தான் இராணுவத்தின் தலைமைக் கட்டளை வழங்கும் அதிகாரி. கட்டளை வழங்கியவர் தான் இதற்கு பொறுப்பு என்று அவர் (ஜெகத்) கூறியுள்ளாரே? என்று சரத் பொன்சேகாவிடம் கேட்கப்பட்டது.

நானும் கோத்தபாய ராஜபக்சவும் போருக்கு கட்டளை வழங்கியதாக அவர் இவ்வளவு காலமும் கூறினார். மலர் மாலை வரும் போது, நன்மதிப்பு வரும் போது, சரத் பொன்சேகா வழங்கிய கட்டளையைத் தாம் பின்பற்றினார் என்று அவர் கூறவில்லை.

சிக்கல் வரும் போது, செய்த குற்றங்கள் வெளியில் வரும் போது, மனித படுகொலை வெளியில் வரும் போது சரத் பொன்சேகா வழங்கிய கட்டளையை பின்பற்றியதாக அவர் கூறுகிறார் என்றார்.

போர்க்குற்ற விசாரணை நடத்தாதது தவறு‘

நான் முன்னர் குறிப்பிட்ட பிரிவுகள் தொடர்பாகத் தான் அவருக்கு கட்டளையிட்டேன். கொலைகள், குற்றங்களுக்காக நான் கட்டளை பிறப்பிக்கவில்லை.

இந்தக் குற்றங்களைச் சுத்தப்படுத்தி, இராணுவத்தை மதிப்பான முறையில், பன்னாட்டுச் சமூகம் ஏற்கும் இடத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெளிப்படுத்தல்களுக்கு அமைய, போர்க் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கும் முறைமையொன்று உள்ளது.

அதை நாட்டுக்குள் செய்யத் தவறினால், வெளிநாடுகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்களால் பாதுகாப்புச் சபை ஊடாக அதைச் செய்ய முடியும்.

இதற்கமையத்தான் ஒவ்வொருவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 -tamilwin.com
TAGS: