கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா?

vadaKizhakkuமுள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்திருந்தது.

தேர்தல் மேடைகளிலும் வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை என தமிழ் மக்கள் மனங்களில் உள்ள பல அபிலாசைகளை முன்வைத்தே
வாக்குகளைப் பெற்றது.

இதற்கான ஆணையாகவும், அங்கீகாரமுமாக மக்கள் ஆணை தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது. அது தனி ஒரு அரசியல் கட்சிக்கானதோ அல்லது ஒரு தனிநபருக்கானதோ ஆணை என்று எவரும் கருதி விட முடியாது.

தீவிர தமிழ் தேசிய கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்புக்குள் வெளியில் சென்ற
பின் தோல்வி அடைந்ததும், புளொட் அமைப்பு கூட்டமைப்புக்குள் வந்த பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றதும் தெரிந்ததே.

இங்கு மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்டமைக்காகவும், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டமைக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆணையை வழங்கியிருந்தனரே அன்றி தனிநபர், அல்லது கட்சிக்கான ஒரு அங்கீகாரம் அல்ல. ஆனால் இந்த நிலையும் மாறும் நிலையே தற்போது உருவாக்கி இருக்கிறது.

தமிழ் மக்களது அபிலாசைகளை முன்னிறுத்திய நிரந்தரமான அரசியல் தீர்வு என்பது இன்று கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ள நிலையில், அவர்கள் முன்னுள்ள சிறிய பிரச்சினைகளைக் கூட ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தீர்க்க முடியாத நிலையே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியின் ஆசிர்வாதத்துடன் ஆட்சியில் இருக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக எதைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், தாம் வாழ்ந்த தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரியும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் இன்று அரை ஆண்டைக் கடந்து செல்கின்றது.

அரசாங்கத்தால் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அந்த மக்களின் கோரிக்கைக்கான தீர்வு என்பது
இன்று வரை கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் அந்த மக்களது போராட்டங்களை முடித்து வைக்கக் கூடிய நிலையில் ஒரு நம்பிக்கையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையால் ஏற்படுத்த முடிந்ததா..?

வடக்கு, கிழக்கு என தமிழர் தாயகப் பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன விகிதாசாரத்தை குழப்பும் நடவடிக்கைளும் பல வடிவங்களிலும் மிகவும் சூட்சுமமாகவும், நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னைய அரசாங்கம் முன்னெடுத்த தமிழர் நில அபகரிப்பு, இனப்பரம்பல் சீர்குலைப்பு போன்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகள் எவை…?, அத்தகைய அபிவிருத்திகள் மக்களது விருப்பத்துடன் இடம்பெற்றதா…?, மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளால் மக்கள் அடைந்த நன்மை என்ன..? என்ற பல கேள்விகள் உள்ளது.

வடக்கின் பொருளாதார மையம், 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா பேரூந்து நிலையம் என்பவற்றின் தற்போதைய நிலை என்பன இதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. தமிழ் மக்களாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பாலும் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் வடக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்தும், பிறந்த நாள் வைபவங்களுக்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியவர்களால் இதனை தடுக்க முடிந்ததா…? இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறிய பல விடயங்களை பட்டியலிட முடியும். ஆனால், அவர்கள் கடந்த 2 வருடத்தில் எதை சாதித்தார்கள் என்று பட்டியலிட முடியுமா…?

தாம் செய்ய வேண்டிய செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விடுத்த வடக்கு மாகாண சபை விவகாரத்தில் தலையிட்டு இன்று அதன் பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளார்கள். தமது கையாலாகாத் தனத்தை மறைப்பதற்கும், அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கும் வடக்கு மாகாண சபை விவகாரத்தை கூட்டமைப்பு தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி கையாள்கின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

இன்று கிழக்கு மாகாணம் தமிழ் மக்களிடம் இருந்து முழுமையாக பறிபோய்க் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள், உறுப்பினர்கள் இருந்தும் எதை சாதித்திருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நிலஅபகரிப்பு, திட்மிட்ட குடியேற்றம் என்பவற்றை தடுக்க முடிந்திருக்கின்றதா…? தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பு என்று நினைத்து எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தார்களோ..? இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே
ஆர்ப்பாட்டங்களும், கொடும்பாவி எரிப்புக்களும் கிழக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட மக்களராமய விகாராதிபதி தமிழ் மக்களின் நிலத்தை மீட்பதற்காக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தலைமை கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அந்த

போராட்டத்தில் எத்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுடன் இணைந்து கலந்து கொண்டார்கள்.

இனவாதம், மதவாதம் என்பவற்ரைற பேசிய விகாரதிபதியை நம்பி அந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் தலைமை மீதும் மக்கள் நம்பிக்கையிழந்தமையும், கூட்டமைப்பு தலைமையின் கையாலாகத் தனமுமே காரணம் என்பதை மறுத்து விட முடியாது. அதன் தாக்கம் அடுத்து வரும்
தேர்தல்களிலும் செல்வாக்கு செலுத்தும் என்பதே உண்மை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களைப் பொறுத்த வரை யாருடைய உதவியைப் பெற்றாவது தமது நிலத்தையும், இருப்பையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதனாலேயே விகாரதிபதியின் பின்னால் மக்கள் சென்றிருந்தார்கள்.

யார் குத்தினாலும் அரிசி ஆனால் சரி என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளார்கள். ஆனால் கூட்டமைப்பு தலைமை யாருடைய காலைப் பிடித்தாவது பதவிகளை தக்க வைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றது.

இதனால் கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோயிருக்கின்றது. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது
ஏற்பட்டு வரும் அதிருப்தி நிலையால் மக்கள் எதிர்காலத்தில் பொதுபல சேனாவை ஆதரித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இது ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் நிலையும் கிழக்கின் நிலையை அடைந்து விடுமா என்ற பயம் இன்று மக்கள் மனங்களில் எழுந்திருக்கின்றது. புதிய உள்ளூராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயங்களில் தமிழர் பகுதிகளாக இருந்த நிலப் பகுதிகள் பல சிங்கள பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.

வடக்கு மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கும் வகையில் தென்னிலங்கை மீனவர்களின் ஊடுருவல் இடம்பெறுகின்றது. இவ்வாறு பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இதனை அந்த அந்த பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுர்பினர்களால் தடுக்க முடிந்ததா..?

ஆனால், வடமாகாண சபை இந்த விடயங்களை கட்டுப்படுத்தி வருகின்றது. வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை அதனை இயக்குவதற்கு அரசாங்கத்தால் பல முட்டுக்கட்டைகள், அதிகாரங்கள் தடைகள் போடுகின்றார்கள்.

ஆனாலும் இருக்கும் அதிகாரங்களை கொண்டு அபிவிருத்தி, அரசியல் உரிமை என்பவற்றை பற்றி வடக்கு மாகாணசபையே பேச வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியும், கூட்டமைப்பு தலைமையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை கைவிட்டுள்ளதால் அந்த விஞ்ஞாபனத்தை ஒட்டி தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை முன்வைக்க வேண்டிய நிலையும் வடக்கு மாகாண சபைக்கும், அதன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்பட்டுள்ளது.

வடக்கிலும் கூட்டமைப்பு தலைமைக்கு எதிராக மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபையை பலப்படுத்தி அதன் ஊடாகவும், தமது கட்சி பிரதிநிதிகள் ஊடாகவும், மக்களை ஒன்று படுத்தி அவர்கள் ஊடாகவும் அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தத்தை கொடுத்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதை விடுத்து வடக்கு மாகாண சபையில் பிழை பிடித்து, அது சுயாதீனமாக இயங்குவதற்கு முட்டுக்கட்டை போடுவது எவ்வகையில் நியாயமானது. இது குறித்து
கூட்டமைப்பு தலைமையும், தமிழரசுக் கட்சியும் சிந்திக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசாங்கத்தினதும், சில அமைச்சர்களினதும் விரும்பத்திற்கும், செயற்பாடுகளுக்கும் வடமாகாண சபையும் அதன் முதலமைச்சரும் தடையாக இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என முக்கிய தீர்மானத்தையும் வடமாகாண சபை நிறைவேற்றியிருந்தது.

வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கும், தென்னிலங்கை தலைமைகளுக்கும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை தொடர்பிலும் அவர்களது அரசியல் அபிலாசை குறித்தும் தெரியப்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை முகத்தை வடக்கு மாகாண சபையை பயன்படுத்தி வடக்கு முதலமைச்சர் அம்பலப்படுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் தென்னிலங்கை சக்திகளுக்கு வடக்கு மாகாண சபையை குழப்ப வேண்டும் என்பதும், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதும் இயல்பாகவே இருக்கின்ற ஒரு விடயம். ஆனால் அதற்கு துணை போகும் வகையில் செயற்படும் தமிழரசுக் கட்சி அதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன…?

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரரைணகள் இடம்பெற்று தற்போது புதிய அமைச்சரவை மாற்றமும் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த நிலையில் கூட எஞ்சியுள்ள ஒரு வருட காலத்தில் அந்த மாகாண சபை தன்னால் முடிந்த பணியை ஆற்றுவதற்கு ஒத்துழைப்பதை விடுத்து தமிழரசுக் கட்சியினரும், அவர்களுக்கு சார்பான சில ஊடகங்களும் வடக்கு முதலமைச்சருக்கு எதிரான சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் முதலமைச்சரின் எண்ண வேட்டத்துடன் இணைந்திருக்கின்ற போதும் ரெலோ தனது நிலைப்பாடு குறித்து தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில் இருக்கின்றது.

கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அல்லது கூட்டமைப்பு தலைமையாக இருந்தாலும் சரி அல்லது மகாண சபையை விமர்சிப்பவர்களாக இருந்தாலும் சரி தாம் இந்த மாகாண சபை செய்யாத என்ன விடயத்தை சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள். அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன என்பதை மக்கள் முன் கூற முடியுமா..?

ஆக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் செயற்பட்டால் கிழக்கு மாகாணம் மோசமான நிலைக்கு சென்று விட்டது. அதனால் அந்த மக்கள் பிக்குகளுக்கு பின்னால் சென்று போராடும் நிலை உருவாகியிருக்கிறது.

வடக்கில் மாகாண சபையை கலைத்து தென்னிலங்கை நகர்வுக்கு தடையாக இருக்கும் வடக்கு முதலமைச்சரை அகற்ற தீவிர நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சிகள் இடம்பெறுகின்றது. இந்த நகர்வுக்கு கூட்டமைப்பு தலைமையும் துணைபோகப் போகின்றதா என்பதை காலமே பதில் சொல்லும்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Thileepan அவர்களால் வழங்கப்பட்டு 02 Sep 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Thileepan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

-tamilwin.com

TAGS: