போர்க் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

jagathபிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது.

இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வருவதற்கு முதல் நாள், மனித உரிமைக் குழுக்கள் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெகத் ஜயசூரிய கட்டளைகளை வழங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டி இவருக்கு எதிராக குற்றவியல் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தன.

ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராகப் பணியாற்றும் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் ஜெனரல் நிலை கட்டளைத் தளபதி ஆவார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளது.

இந்த யுத்தத்தின் போது ஜயசூரியவின் கட்டளையின் கீழ் சிறிலங்கா இராணுவத்தினர் தயவு தாட்சண்யமின்றி பொதுமக்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், சரணடைந்தவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும், பலவந்தமான காணாமற் போதல் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் மனித உரிமைகள் அமைப்புக்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இதனை ஏற்க மறுத்தது.

2015ல் சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை நடத்திய மகிந்த ராஜபக்ச எதிர்பாராத வகையில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் என உத்தரவாதமளித்த போது அதனை அனைத்துலக சமூகம் வரவேற்றது.

போரின் போது காணாமற் போனவர்களுக்கான மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகங்கள், உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, விசாரணைப் பொறிமுறை போன்ற பல்வேறு ஆணைக்குழுக்களை உருவாக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும், இதில் எந்தவொரு ஆணைக்குழுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

சிறிலங்காவின் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் கூட, போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரிகளோ அல்லது பொதுமக்கள் மீது இன்னமும் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இன்னமும் நீதி எட்டப்படவில்லை.

கடந்த ஆறு மாதங்களாக முன்னாள் போர் வலயத்தில் காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 30 அன்று காணாமற் போனவர்கள் தொடர்பான அனைத்துலக தினத்தில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் காணாமற்போனவர்களின் உறவுகள் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 192வது நாளாக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளை நான் கடந்த ஜூலை மாதம் சந்தித்த போது, சிறிலங்கா அரசாங்கம் தமக்கு நீதியைத் தரும் என்பதில் தாம் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனக் கூறினார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணுக்கணக்கற்ற அமைப்புக்களிடம் காணாமற் போன தமது பிள்ளைகள் தொடர்பான விபரங்களை வழங்கியதாக அவர்கள் விபரித்தனர்.

தமது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் கூட இன்னமும் ஒருவரைக் கூட சிறிலங்கா அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

படுகொலைகளைச் செய்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் என அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் தமிழ் மக்கள் மீது பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளதற்கான சாட்சியங்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்காக காணாமற் போனவர்களின் உறவினர்கள் சென்ற போது புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் நீதி கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களில் ஒருவர் கடந்த வாரம் இனந்தெரியாத இரு நபர்களால் தாக்கப்பட்டதுடன் உடனடியாக ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும் அச்சுறுத்தப்பட்டார்.

போர்க் குற்றங்களுக்கான உள்நாட்டுப் பொறுப்புக்கூறல்கள் இடம்பெறவில்லை என்பதால் அனைத்துலக சமூகம் சிறிலங்கா மீது குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடல்ல. தற்காலிக அனைத்துலக விசாரணையை உருவாக்கக் கூடிய நாடாகவும் சிறிலங்கா காணப்படவில்லை. ஆகவே ஜயசூரிய தூதுவராகப் பணியாற்றிய பிரேசில் போன்ற நாடுகள் இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை முன்னெடுக்க முடியும்.

பொதுவாக தமது தேசிய எல்லைக்குள் இடம்பெறும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கான உரிமையை உள்நாட்டு நீதிமன்றங்கள் கொண்டிருந்தாலும் கூட, அனைத்துலகச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்படும் மோசமான குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சட்ட உரிமையைப் பல நாடுகள் கொண்டுள்ளன.

பிரேசிலின் சட்டமும் பிரேசிலிலுள்ள நீதிமன்றங்கள் தனது நாட்டிற்குள் நுழையும் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குகின்றது.

குறிப்பாக இனப்படுகொலைகள் அல்லது சித்திரவதைகள் போன்ற எந்தவொரு பாரிய குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி ஒருவர் தனது நாட்டிற்குள் நுழையும் போது அவரை விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்குமான ஒப்பந்தக் கடப்பாட்டை பிரேசில் கொண்டுள்ளது.

ஜயசூரிய பிரேசிலுக்கான தூதுவர் என்ற வகையில் இவர் இராஜதந்திர சார் பாதுகாப்பைக் கொண்டுள்ளார். ஆனால் இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பிரேசில் தொடர விரும்பினால் இவர் மீதான இராஜதந்திரப் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு சிறிலங்காவிடம் பிரேசில் கோரிக்கை விடுக்க வேண்டும்.

ஆனால் இந்தக் கோரிக்கையை சிறிலங்கா பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஜயசூரிய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

பொதுவாக தூதுவர்கள் தமது பதவியிலிருந்து விலகும் போது அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இராஜதந்திரப் பாதுகாப்பையும் இழக்கின்றனர்.

ஜயசூரிய பணியாற்றிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏதாவது ஒரு நாடு இவருக்கு எதிராக விசாரணையை மேற்கொள்வதெனத் தீர்மானித்தால், இவருக்கு எதிராக அனைத்துலக சிறைப்படுத்தப்படுவதற்கான பற்றாணை (பிடி விறாந்து) அறிவிக்கப்பட முடியும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தன்னைக் கைதுசெய்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஒப்படைக்க விரும்பும் ஒரு நாட்டில் தங்கியிருப்பதை ஜயசூரிய தவிர்க்க வேண்டிய நிலையேற்படும்.

இவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்பட்டால் அதனை எவ்வாறு முகங்கொடுப்பது என்பதை ஆராய்வதற்கு ஜயசூரியாவிற்கு காலஅவகாசம் ஒன்று தேவைப்படுகிறது.

தற்போது நாடு திரும்பியுள்ள ஜயசூரிய தனது விடுமுறையை தனக்கான காலஅவகாசமாகப் பயன்படுத்திக் கொள்வாரானால், இவருக்கு எதிராக அனைத்துலக வழக்கொன்று முன்வைக்கப்பட்டால் அது பயனற்ற ஒன்றாகவே காணப்படும்.

இதன் விளைவானது ஜயசூரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை புறக்கணிக்கப்படுவதற்கு வழிகோலுகிறது. எனினும் வேறு சந்தர்ப்பங்களில் இந்த விளைவானது மேலும் பலம் பெற்றதாக உணரப்படலாம்.

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஜயசூரிய தொடர்பில் ஏற்பட்டுள்ள சங்கடமான நிலையானது ‘போர்க் கதாநாயகர்களை’ தொடர்ந்தும் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கும் முறைமை தொடர்பான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை வழங்கலாம். அத்துடன் உள்நாட்டு கலப்பு நீதிப் பொறிமுறையை உடனடியாக உருவாக்குவதற்கும் வழிவகுக்கலாம்.

இவ்வாறான நகர்வுகள் காணாமற் போனவர்கள் தொடர்பான சில தகவல்களை அறிவதற்கும் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவை உருவாக்குவதற்கும் உந்துதலை அளிக்கலாம்.

பரந்தளவில் அனைத்துலகப் பார்வையாளர்களைப் பொறுத்தளவில், இந்தச் சம்பவமானது போர்க் குற்றவாளிகள் இனிமேலும் சமூகத்தின் கௌரவமான உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்பதற்கான ஒரு சமிக்கையாகும்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில், தமக்கு எதிராக மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஒருபோதும் நீதியிலிருந்து மறைந்து விட முடியாது என்கின்ற மெல்லிய நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்துள்ளது.

– Puthinappalakai

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Murali அவர்களால் வழங்கப்பட்டு 03 Sep 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Murali என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

TAGS: