எவ்வளவு காலத்திற்கு பேச்சுவார்தைகள்? தீர்க்கமான முடிவுதான் என்ன: துயரத்தில் மக்கள்

சொந்த மண் மீட்புக்காக போராடும் நிலைமை தமிழர்களுக்கு எழுதப்பட்ட விதியாகியுள்ளது, அன்று பிள்ளைகள் போராடினார்கள் இன்று அதே மண் மீட்புக்காக நாம் போராடுகின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக நிலத்தை விடுவிக்கக்கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றைய தினம் 187 நாளை எட்டியுள்ளது.

138 குடும்பங்களுக்கு உரித்தான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், எனினும் இதுவரையில் எவ்விதத் தீர்வுகளுமின்றி இந்த மக்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.

2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கேப்பாப்புலவு பூர்வீகக் கிராம மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியமர்வு செய்யப்படவில்லை.

நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு மாதிரிக்கிராமத்தில் மீள்குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

நாங்கள் தர்மத்தின் வழியிலும், நியாயத்தின் வழியிலும் எமது போராட்டத்தை தொடர்ந்துள்ளோம். எமது போராட்டம் குறித்து உயர் மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் முடிவுதான் என்ன? எவ்வளவு காலத்திற்குத்தான் பேச்சு நடத்துவார்கள், தீர்க்கமான முடிவை விரைவில் அறிவியுங்கள். எமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடரும் என அவர்கள் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: