உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்

sambbanthan“உண்மையை மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையென்றால், நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டமை சாதாரண விடயமல்ல, மிகவும் பாரதூரமான விடயம்.

தெற்கில் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயிரக்காணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அப்போது, இந்த நாட்டு மக்கள் அதற்காக குரல் கொடுத்திருந்தால், 2009இல் அவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருந்திருக்கும்.

எதையும் செய்துவிட்டு தப்பிவிடலாம் என்கிற சிந்தனையோடு இங்கு பலரும் இருக்கின்றார்கள். சட்டமும், இராணுவமும், பொலிஸூம், அரசாங்கமும் அதற்கு உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: