தங்களது படை சரியான முறையிலே சர்வதேச நியமங்களைக் கடைப்பிடித்துத்தான் இந்தப் போரைச் செய்தது என்று நிரூபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. இதற்கு முதற் சான்றாக அமையப் போவது ஜகத் ஜயசூரிய அவர்களின் வழக்கு என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரமான அடிப்படையிலான நிதி 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வந்தாறுமூலை உப்போடை வீதிக்கு கொங்கறீற்று இடும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வருடம் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 03 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடு செய்து வீதி கொங்கிறீற்று இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லிய ஒவ்வொரு கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களையே அரசாங்கம் சொல்லி வந்தது ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நாங்கள் கூறிவந்த ஒவ்வொரு விடயமும் ஆம் என்ற விடைக்கு இலக்காகி இருப்பதனை எமது மக்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நகர்ந்து கொண்டு செல்கின்றன.
முன்பு குற்றமே இல்லை என்றார்கள், போர்க்குற்றம் இல்லை என்றார்கள், விசாரணை என்பது சர்வதேச நீதிமன்றத்தினால் நடத்தப்படக் கூடாது என்றார்கள், சர்வதேசம் இதில் தலையிடக் கூடாது என்று சொன்னார்கள் ஆனால் அவை ஒவ்வொன்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையிலே போர்க்குற்றம் ஒன்று நடைபெறவில்லை என்பதை அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. தற்போது இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அவர்களுக்கு போர்க்குற்றம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா அவர்கள் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இளைத்திருக்கின்றார் என்றும் அதற்காக சாட்சி சொல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருக்கின்றார்.
உண்மைகள் வெளிவர இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தை அரசியலாக்க நினைப்பது உண்மையை மூடி மறைக்க நினைக்கின்ற செயலாகும். உண்மை என்பது நெருப்பு அதை மூடி மறைக்க நினைப்பதென்பது வெற்றி பெறக் கூடிய ஒரு செயற்பாடு அல்ல. அந்தவகையில் கூட்டு எதிர்க்கட்சியினரும் ஏனையவர்களும் இதனை நாட்டுக்கு எதிரானதாகவும் படைவீரர்களுக்கு எதிரானதாகவும் சொல்லிக் கொள்ள முற்படுவது என்பது பொய்யாக்கப்படும். காலம் இதற்குப் பதில்சொல்லும். ஏனெனில் தனது படை கண்ணியமாகச் செயற்பட்டது என்றால் அதனை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனவே எந்தவிதமான பயமும் இல்லாமல் அதனை நிரூபிக்க வேண்டும்.
முதுகிலே காயம் இல்லையென்றால் காடு புகுவதற்கு என்ன பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு எனவே தங்களது படை சரியான முறையிலே சர்வதேச நியமங்களைக் கடைப்பிடித்துத்தான் இந்தப் போரைச் செய்தது என்று நிரூபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. இதற்கு முதற் சான்றாக அமையப் போவது ஜகத் ஜயசூரிய அவர்களின் வழக்கு. நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றோம் போர்க்குற்றம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது என்று. எனவே போர்க்குற்றம் நடைபெறவில்லை என்பதை நிரூபித்துக் காட்ட இப்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. சாட்சிகள் முன்வரும் போது உண்மை நிச்சயமாக வெளிவரும் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தீர்வு குறிப்பாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-tamilcnn.lk