மட்டக்களப்பில் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் உறவுகள் எடுத்துரைப்பு!

maddakalappuமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 6,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எடுத்துரைத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயற்பாட்டாளரான எஸ்.அரியமலர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் தொடர்ந்த காலத்தில் மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், சட்டத்துக்குப் புறப்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் இடம்பெற்றதாகவும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திப்பதாக ஜனாதிபதி ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. ஆனாலும், இந்தச் சந்திப்புக்கு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பல அமைப்புக்களும் அழைக்கப்படவில்லை என்று உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

-puthinamnews.com

TAGS: