வடமாகாண முதலமைச்சரின் சட்டமுரணான செயற்பாடுகளை தெளிவுபடுத்தி என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், 13 வது திருத்தச்சட்டம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (புதன்கிழமை) டெனிஸ்வரன் விடுத்துள்ள ஊடக அமைச்சர் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த வழக்கு தாக்கல் செய்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்று வடமாகாண முதலமைச்சரின் பழிவாங்குகின்ற விடயங்களையும் அதேநேரம் சட்டமுரணாக அவர் செயற்பட்ட விடயங்களையும் நீதிமன்றத்தின் ஊடக சுட்டிக்காட்ட வேண்டுமென்பது.
அடுத்தது முதலமைச்சரின் செயற்பாடு பிழையென நீதிமன்றம் தீர்ப்பளிக்குமாயின், முதலமைச்சருக்கு ஒரு அமைச்சரை நீக்குவதற்க்கான அதிகாரம் இந்த 13 வது திருத்தச்சட்டத்தில் இல்லையென்பதனையும் நிரூபிக்க முடியுமென்பதாகும்.
இத்திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கபெற்ற மாகாணசபை நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வாக இருந்தபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது மக்களுக்கு செய்யவேண்டிய சில அவசர தேவைகள் மற்றும் வேலைத்திட்டங்களை கருத்தில்கொண்டு இவ் ஆட்சி அலகினை ஏற்று இருக்கின்றது.
ஆனால் அதில் போதிய அதிகாரமும் இல்லை என்பதனையும் இவ்வழக்கினூடாக சுட்டிக்காட்ட முடியும்.
13ஆவது சட்டதிருத்தத்தில் முதலமைச்சருக்கு போதிய அதிகாரம் இல்லையென்ற தீர்ப்பு வழங்கப்படுமென்று சொன்னால் அதில் இருக்கின்ற குறைபாடுகளையும் அதிகாரப்பகிர்வின்மையையும் எமது மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஆணித்தரமாகவும் வெளிப்படையாகவும் எடுத்துக்காட்டகூடிய சந்தர்ப்பமாக இவ்வழக்கு அமைகின்றது.
ஒருவேளை முதலமைச்சருக்கு ஒரு அமைச்சரை நீக்குகின்ற அதிகாரம் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்படும் எனின் 13ஆவது சட்டதிருத்தத்தில் ஓரளவுக்கு அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் எடுத்துக்காட்ட முடியும்.
ஆகவே எத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாளையதினம் (இன்று வியாழக்கிழமை) இவ்வழக்கு விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது அதன்போது இரண்டு விடயங்கள் நடைபெறுவதற்க்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
ஒன்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவ்வாறான சட்டமீறல்கள் நடைபெற்றிருக்குமென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் திருப்திப்படுமாயின் உடனடியாகவே தடை உத்தரவு பிறப்பிப்பதர்க்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
அவ்வாறு இல்லையெனில் இரண்டு வாரங்களுக்குள் முதலமைச்சர் அவர்களும் ஏனைய பிரதி மனுதாரர்களும் தங்களது பதில்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்படும்.
அவ்வாறு அவர்களின் பதில்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் நீதிமன்றமானது உரிய விசாரணைகளை மேற்கொண்டு இறுதியான தீர்ப்புக்கு வரக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதுடன் குறித்த தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
மேலும், எதிர்காலத்தில் சட்டமாணவர்கள் அரசியலமைப்பு தொடர்பாக கற்கின்றபோது இவ்வழக்கானது சுட்டிக்காட்டக்கூடிய வழக்காக அமையும்.
அதிகாரம் இல்லையென்ற விடயத்தினை நீதிமன்றம் வழங்குமென்று சொன்னால் உண்மையாகவே எமது மக்களுக்கு சமஸ்டி முறையிலான ஆட்சி அலகொன்று தேவை என்பதனை இவ்வுலகுக்கு வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் அமையப்போகின்றது எனவும் பா.டெனிஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-tamilcnn.lk