காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை 200 நாட்களை நிறைவு செய்துள்ளது.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை என்ன? இறுதி யுத்த நாட்களில் இராணுவத்திடம் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது? என்கிற பல கேள்விகளோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆயினும், அரசாங்கமோ, சர்வதேசமோ தமக்கான உறுதியான பதில்களை வழங்குவதிலிருந்து தவறியிருப்பதாகவும், தமது நீதிக்கான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே, போராட்டம் 201வது நாளாக இன்றும் தொடர்கின்றது.
-puthinamnews.com