தமிழர்களின் சிந்தனையில் ஆயுத கலாசாரம்! – பொலிஸ்மா அதிபர்

pujyasriகடந்த கால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது வாழும் மக்கள் தொடர்பிலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பிலும் கரிசனை கொள்வது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல வருட காலமாக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் தற்போதும் வடக்கில் உள்ளதென குறிப்பிட்ட பொலிஸ்மா அதிபர், சகலரும் புனர்வாழ்வு பெற்றுள்ளனரா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென கூறியுள்ளார்.

வடக்கு மக்களின் இன்றைய நிலை குறித்து, தான் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்ததாகவும், படையினர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடியதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சிவில் அமைப்பினர், விசேட அதிரடிப்படையினர் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு, தற்போது நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilcnn.lk

TAGS: