கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

vikneswaran meet therar

வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கண்டி மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தென்பகுதியில் பௌத்தர்களும் பௌத்த மகாநாயக்கர்களும் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் இனவாதிகள் என்ற நோக்கில் நோக்கப்படுகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின்போது மல்வத்த மகாநாயக்கருக்கு வடமாகாண முதலமைச்சர் தான் ஒரு இனவாதியல்ல என்பதை எடுத்துரைத்ததுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் முதலமைச்சர் மல்வத்த மகாநாயக்கருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், யுத்தம் காரணமாகவே வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் விதவைகளாகவும், வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதனால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன், தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பதாகவும், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தனது பிள்ளைகள் நித்தம் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் கூறினார்.

கண்டி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு எதிராக மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வழக்கில் அவருக்கு ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய இரண்டு வழக்குகளிலும் அவருக்குத் தண்டனையுடன் ஒரு வருடம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 3 வழக்குகளிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருப்பதன்படி 3 வருடங்கள் தனித்தனியே புனர்வாழ்வுக்குச் செல்ல வேண்டுமா அல்லது மூன்று வழக்குகளின் தீர்ப்புக்கு அமைய ஒரு வருடம் மாத்திரம் புனர்வாழ்வுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதனால்தான் குழப்பமடைந்திருப்பதாக அந்தக் கைதி தெரிவித்துள்ளார்.

கைதிகளின் மனக்குறைகள், வழக்கு விசாரணைகள் தொடர்பான விடயங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்ட முரண்பாடுகள், சட்டரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பில் விசேடமாக சட்டத்தரணி ஒருவரை நியமித்து அந்த சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். -BBC_Tamil

TAGS: