யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் இணக்கம்!

mullivaikkal-300x173யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்றை அமைப்பதற்கும், பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது.

இது தொடர்பில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன சபையில் அறிவித்தார்.

யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக பொதுவான நாளொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது தனிநபர் பிரேரணையில் கோரியிருந்தார்.

இப்பிரேரணை மீதான விவாதத்தில் அரசாங்கம் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பதிலளித்தார். இந்தப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவுகூருவது மிகவும் முக்கியமானது என்றார்.

குறிப்பிட்டதொரு இனம் சார்ந்ததாக இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்த சகலரும் நினைவுகூரப்பட வேண்டும். இந்தப் பிரேரணையை பாதுகாப்பு அமைச்சு முழு மனதுடன் ஆதரிக்கிறது.

“இருந்தபோதும் சில அவதானிப்புக்களை முன்வைக்க விரும்புகின்றோம். நினைவுத் தூபியானது பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அதாவது பொது மக்கள் செல்லக் கூடியதாகவும், பாதுகாப்பான இடமாகவும் இது இருக்க வேண்டும். மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்திருப்பதால் சகலருக்கும் பொதுவான இடமாக அநுராதபுரம் அமையும். இது பற்றி கலந்துரையாடி எதிர்காலத்தில் முடிவொன்றுக்கு வர முடியும்” என்றார்.

அது மாத்திரமன்றி நினைவுகூருவதற்கான பொது தினமாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை அதற்கான தினமாக தீர்மானிக்க முடியும். திகதி தொடர்பாக எழக்கூடிய கருத்து வேறுபாடுகளை களையும் வகையில் இது அமையும் எனக் குறிப்பிட்டார்.

மூன்றாவது அவதானிப்பாக, நினைவுத் தூபிக்கான பொறுப்பு மற்றும் அதன் பராமரிப்பு என்பன தக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டும்.

உள்விவகார அமைச்சு அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகம் போன்ற ஏதாவது பொறுப்புவாய்ந்த நிறுவனமொன்றுக்கு ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது அவதானிப்புக்கள். எனினும், இவை குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

-puthinamnews.com

TAGS: