வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான எலிய அமைப்பின் தொடக்க விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எனது 35 ஆண்டு இராணுவ வாழ்வில், 26 ஆண்டுகளை வடக்கு, கிழக்கில் செலவிட்டுள்ளேன். போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றிய பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் இப்போது ஓய்வு பெற்று விட்டனர்.
அந்தப் பகுதி மக்களுடன் பல ஆண்டுகளைக் கழித்தவர்கள் என்ற வகையில், அவர்களை விடுவித்தவர்கள் என்ற வகையில், அவர்களுக்கு என்ன தேவை என்று எமக்குத் தெரியும்.
அவர்கள் எவருக்கும் காவல்துறை அதிகாரமோ, நீதித்துறை அதிகாரமோ, அதிகாரப் பகிர்வோ, அல்லது தனிநாடோ தேவையில்லை. அவர்கள் அனைவரும் கோருவது அமைதியான கௌரவமான வாழ்வைத் தான்.
மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும். அதிகாரப் பகிர்வு பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்பதை முட்டாள் ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net